December 28, 2008


ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு சருகு

1 ஆற்றிசை

ஆறு போல இசை
பேரொளியாய் பாய்ந்துகொண்டிருந்தது,
நாம் கைகோர்த்தபடி
கரையில் நின்று கொண்டிருந்தோம்,
ஆற்றுக்கு அப்பால்
பேரொளி மட்டுமே இருந்தது,
ஆற்றுக்குப் பொருத்தமான வரிகளை
நாம் நிதானத்தோடு எழுதினோம்,
நம்மையும்
ஆற்றோடு போகும் அனைத்தையும் கவனித்தபடி
நாம் எழுதிய வரிகள்
ஆற்றுக்குள் மெதுவாக ஊர்ந்து இறங்கின,
வரிகள் ஆற்றில் மரக்கால்களைப் போல மிதந்தன,
ஆறு அவற்றை நகர்த்திச் சென்றது, பிறகு
அவை ஆற்றிலிருந்து எழுந்து வந்து
நம்மருகில் நம்மோடு
ஆற்றைப் பார்த்துக்கொண்டு நின்றன.


2 ஆற்றா இசை

குளிர்காலத்திலும், மங்கிய வெளிச்சங்களிலும்,
இரவுகளிலும், கோடைமழைப் பொழிவிலும்,
மலைச்சரிவிலும், கூழாங்கல் படுகைகளின் மீதும்
நமது கதை நிகழ்கிறது

இந்த இடங்கள் நமது கதையின் பெருமையைச்
சூடிக்கொள்ள நாம் இடம்தரப் போவதில்லை,
நேரமற்ற நேரத்தில் அணிந்த ஆபரணமாய்
எந்நேரமும் நம் மணிக்கட்டைப் பற்றியிருக்கிற

கடிகாரம், காலநிலையைப் பற்றி கவலைகொள்ளாது;
கதை எங்கு நிகழ்ந்தாலும், பாறைநிலத்திலோ,
மழைக்குப் பிறகு ஒற்றையடிப்பாதையிலோ,
எந்தப் பொழுதில் நிகழ்ந்தாலும், அது நமது கதைதான்

விடியலுக்கு முன்பே நாம் தெருவில் இறங்கிவிட்டோம்,
தொலைவில் நம் இல்லம் கரும்புள்ளியாகி மறைகிறது,
நம் கையிலிருந்த மாதுளம்பழங்களை வழியில்
செந்நாய்களை நோக்கி எறிந்துவிட்டோம்

நமது கதைமரபின்படி, ஒவ்வொரு திருப்பத்திலும்
நாம் ஏதாவது ஒன்றை விடுத்துச் செல்கிறோம்,
நாம் நடந்து வந்திருக்கும் தொலைவு
நம் மகிழ்ச்சியின் தொலைவைக் காட்டுகிறது

நமக்குத் தாகம் ஏற்படுவதில்லை,
நாம் வெற்றுடலுடன் ஆற்றோரமாய் நடக்கிறோம்,
சத்தமெழுப்பாமல் நடக்க நமக்குப் பழகிவிட்டது,
ஒருவர் பேசும்போது ஒருவர் அமைதி காக்கிறோம்

நம்மை மறக்கச் செய்த இசையில்
கரைய இயலாமல் கரை திரும்பிய வரிகளை
நாம் உதடசையாமல் சொல்லிக்கொள்கிறோம்,
நமக்குத் தாகம் ஏற்படுவதில்லை.

December 20, 2008


"காணாமல் போனவைகளிடையே உன்னைக் கண்டேன்"

மேகம்-
தேனீ போல மாறுமென நீ சொன்னாய்
நத்தை போல ஊருமென நத்தை சொல்லியது

வானின் நீலத்தைக் குறைக்கிறது
அந்த ஒற்றை மேகம்

’நான் இல்லை’
'நான்' இன்றிப் 'பிறர்' இல்லை

ஒரு மேகத்திற்குள் இன்னொன்று மறைந்துவிடும்
அளவுக்கு அங்கே இடமிருக்கிறது

காற்றுக்குத் தெரியாது
எத்தனை அறைகளை நிரப்பியதென்று

வரும் வழியும் போகும் வழியும் வெவ்வேறு
ஒவ்வொருவருக்கும் வழி தனித்தனி

குளிர் படிந்திருக்கும்
யாருமற்ற படுக்கையில்

மதச்சுமையின்றி நடக்கும் குதிரை
வேகத்தைக் குறைப்பது புத்தகச்சுமை

December 14, 2008


மொழியாமொழியின் உறைவிடங்கள்

1

மரம்போல்வ மாந்தர் மொழிசொல்லார் அவ்வழியே
சொல்மொழியாக் காதலரைக் காண்

சொல்லினும் செய்தல் மிகநன்று செய்தபின்
சொல்லார்க்கு இல்லை நிழல்

தம்புகழைச் சொல்வோன் வருந்துவான் தம்மொழியைக்
கேட்போன் அறியான் எனின்


2

ஓர் உயிரும் ஓர் உடலும் சேர்ந்த பிணைப்பு உறுதியானதா?
இரண்டு உயிர்கள் சேர்ந்த பிணைப்பு உறுதியானதா?
உடலைக் கொண்டாடுவோர் சிலர்
உயிரை வருத்துவோர் சிலர்


3

தனிமனிதனுக்கு மொழியில்லை,
மனிதன் மொழிக்கு உயிர் தருகிறான்,
மனிதன் தோற்றுவிடுகிறான்

November 30, 2008


மையங்களற்ற வையங்களில்

நீண்டு கிளைக்காமல் மீண்டும் அகலமாகும் பாதைகளில்
பூத்திருந்த மரங்களும் சில புல்லாங்குழல்களும்
தொலைந்துவிட்டன நாட்களுக்கான விதைகளைத் தராமல்

கடவுளர்கள் முன்பே இறந்து போய்விட்டார்கள்
குரல்கள் கரைகின்றன, நெரிசல்கள் மிகுகிறது, பாதைகளில்
இனி உண்மைகளைக் கண்டறியத் தேவையில்லை

படிக்கட்டுகளின் எல்லைகளில் கட்டிடங்கள் நிற்கின்றன
படிக்கட்டுகளில் அர்ச்சுனர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்,

கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் பிரதிபலிக்கும்
ஒற்றை வானத்தில் வெளுத்த மேகங்களின் பயணங்கள்!
பலப்பலப் பயன்கள் பொதிந்த பொருட்கள் நிறைந்த அறைகளின்
வெளிச்சுவர்களை உரசிச் செல்கின்றன தென்றல்கள்!

November 15, 2008


மலையின் மீது காலையும் மாலையும்

சிலபொழுதுகளில்
வானத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போலவும்
சிலபொழுதுகளில்
வானத்தைக் கூராகக் குத்துவது போலவும் தெரிந்த
மலையுச்சி,
உச்சியை அடைந்ததும்
சமதளமாக
அமர்ந்துகொள்ளத்தக்கதாக இருக்கிறது;
மலைகள்,
வானத்தைத் தொடுவதே இல்லை;
தொடுவானம்,
கீழிறங்கித் தெரிகிறது, மலையின் மீதிருந்து காணும்போது;
தொடுவானத்திற்கும்
கீழே, முதலில் நிகழ்ந்து விடுகிறது காலை;
அதோ
காலையை அல்லது மாலையை நோக்கிச் செல்கின்றனவே,
அவற்றோடு
நாமும் நகர்ந்து கொண்டிருக்கிறோம்;
நாம்
பார்த்துக் கொண்டே இருக்கும்போது,
காலை
நிகழ்கிறது இந்தத் தொடுவானில், அது போலவே
மாலை
நிகழ்கிறது அந்தத் தொடுவானில்

November 5, 2008


இரண்டு நாட்களுக்கிடையில் ஒரு பழம்

(தேவதச்சனுக்கும் வில்லியம்ஸுக்கும்)

இரண்டு நாட்களுக்கிடையே
நான் சிக்கியிருக்கிறேன்,
நான் இங்கே தனித்தில்லை,
என்னிடம் ஒரு புகைப்படம் இருக்கிறது,
அதை எடுத்துப் பார்க்க முடியாதபடி,
அசைய முடியாதபடி, நான் சிக்கியிருக்கிறேன்,
இல்லை, நான் எதையும் யோசிக்கவில்லை,
இந்த நிலைத்த கணங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

October 19, 2008


ஒளிந்துகொள்ள ஆயத்தமாகும்போது

எந்த உடை அணிந்துகொள்வதென மெனக்கெடாதே,
உன்னுடைய அனைத்து உடைகளும்
உன்னுடைய நிறமேறி இருக்கின்றன,
உன் உடைதான் உன்னுடைய அடையாளம்,

நீ ஒரு சிங்கத்தோடு வசிக்க வேண்டும்
என்னும் விருப்பம் கொண்டிருந்தாய்,
உனக்கான குகையின் பங்கை சிங்கத்திடமிருந்து
எப்படியும் பெற்றுவிடுவாய் எனச் சொன்னாய்,

சிங்கம் நன்னடத்தைகளைக் கொண்டது
என்னும் நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது,
உன் எண்ணங்கள் சிறந்த நோக்கங்களையே கொண்டிருக்கின்றன,
ஆனால், விளையாட்டாகவே நீ அதைச் சொன்னாய்,

உனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கிறது:
வாசலைத் தாண்டியதும் கண்ணுக்கெட்டும் தூரத்தில்
பூக்கள் தென்படுமா? நீ கற்ற எண்களின் இடமதிப்புகள்
பூக்களை எண்ணிக்கையிடப் போதுமானதா?

இடையே கரும்பூக்களைக் கண்டால்
என்ன செய்வதென வருத்தம் கொண்டிருக்கிறாய்,
பூக்களை விட, நாளின் எத்தனை தருணங்களில்
நீ மகிழ்வாக இருக்கிறாய் என்பதுதானே உனக்கு முக்கியமானது?!

October 2, 2008


பூமியின் பறவைகள்

நீ ஒவ்வொரு செடியாய் தாவித் தானியம் உண்கிறாய்,
எங்கள் உலோகச் சிறகுகள் மேலும் கீழும் அசையாது,
பரந்துபட்ட கோணங்களில் பறக்கவே நாங்கள்
ஆசை கொண்டோம், நாங்கள் பூமியைத் தாண்டிவிட்டோம்

சிறகு என்பதற்குச் சுதந்திரம்
என்று பொருள் கொண்டனர், எங்களில் பாதிப்பேர்,
எப்போது தெரியுமா? சிறகுகளுடன்
தேவதைகள் காட்சி தந்தபோது

காதுகளை விசிறியபடி இருக்கும் யானைகளுக்குப்
பறக்கச் சொல்லிக் கொடுத்து
பலத்த காயங்களை யானைகளுக்குத் தந்து
தாங்களும் பெற்றனர் எங்களில் சிலர்

எங்களின் பரந்துபட்ட பார்வையால்
எங்களுக்கு வேண்டியனவற்றை அதிகரித்தும்
எங்களுக்கு வேண்டாதனவற்றை அழித்தும்
சிறகு என்பதற்கு ஆற்றல் என்றொரு பொருள் அறிந்தோம்

வேற்றுகிரகத்தில் எங்களைச் சந்திக்க நேர்பவர்கள்
அறியாமையாலோ பட்டப்பெயராகவோ
எங்களை 'பூமியின் பறவைகள்' என்று அழைத்தால்
நீ வருத்தம் கொள்ளாதே, பறவையே!

உன் நளினமான பறத்தலைக் கண்டு, எங்களில் சிலர்,
உன் மென்மையான சிறகுகளையே விரும்புகின்றனர்,
தற்காக்கும் முயற்சிகளுக்கும் தண்ணீரைத் தேடவும்
அவர்களுக்கும் வளரட்டுமே உன்னைப் போன்ற சிறகுகள்!

September 20, 2008


வெளியே கொண்டாட்டமில்லை

வலி முதலில் வேதனையைத் தருகிறது,
வலியேற்பட்டவுடன் எல்லோரும் சொல்லிக்கொள்வது:
'இது தற்காலிகம்தான், தானாகச் சரியாகிவிடும்',
அதுவே முதல் நம்பிக்கை

பிறகு வலி அப்படியே இருந்தாலும்,
குறைந்தாலும், வேதனை பெருகுகிறது,
அதுவே அடுத்த கட்டத்திற்குத் தள்ளுகிறது,
ஒரு நுட்பமான வலியினை நோக்கி.

அவ்வலி ஒருவரும் பார்க்க இயலாதது,
பிறகு நீ வேதனைப்படுவதில்லை,
நீ வலியைக் கொண்டாடுவதில் மும்முரமாகிறாய்,
நீ வெளியே வருவதில்லை

September 9, 2008


நடனமேடையில் நின்று, இயந்திரத்தின் இசைக்கு...

அவர்கள் வேலைக்குச் செல்வதால் உண்கிறார்கள்
அவர்கள் வேலைக்குச் செல்வதால் இவர்கள் உண்கிறார்கள்
அவர்கள் உணவைக் கையிலெடுத்துக் கொண்டு செல்கிறார்கள்
அவர்கள் நின்றுகொண்டே உண்கிறார்கள்
அவர்கள் இடைவேளையின்றி உண்கிறார்கள்
அவர்கள் உணவு இடைவேளையின்றி வேலை செய்கிறார்கள்
அவர்கள் இடைவேளையின்றி வேலை செய்கிறார்கள்
அவர்கள் வேலைக்குத் தகுந்த உணவு உண்டார்கள்
அவர்கள் வேலையின்போதே உண்கிறார்கள்
அவர்கள் நேரம் தவறி உண்கிறார்கள்
அவர்கள் நான்கு வேளை உண்டார்கள்
அவர்கள் நான்கு வேளை உண்கிறார்கள்
அவர்கள் உண்ணும் உணவுக்குத் தக்க உடலுக்கு வேலை தருகிறார்கள்
அவர்கள் உண்ணும் உணவுக்குத் தக்க வேலை செய்கிறார்கள்
அவர்கள் உணவுக்காக வேலை செய்தார்கள்
அவர்கள் உணவை எண்ணாமல் உண்கிறார்கள்
அவர்கள் உணவை எண்ணாமல் வேலை செய்கிறார்கள்

August 18, 2008


கனவுத்திணை

பார்வை - 1 : உருவம்

கனவில் ஆபத்துகள் நிறைய,
கனவில் உயிர் வாழவேண்டும் என நினைத்தால்
அது கனவினையே அழித்துவிடும்


பார்வை - 2 : அணி

கே: ஒளி-ஒலி எப்படி இயங்குகிறது?
ப: கண்ணுக்குள் பாய்ச்சப்படும் ஒளி கனவினைச்
சென்று சேராது; கனவில் ஒலி, ஒலியற்றதாக இருக்கிறது

கே: எத்தகைய பரப்பில் கனவு முகிழ்க்கும்?
ப: வண்ணங்களைத் தீவிரமாக நம்பும் மனதிற்கும்
சிந்தனை மறுத்த மூளைக்கும் இடையிலான பரப்பில்

கே: எந்த வயதில் கனவு காணத் தொடங்கலாம்?
ப: இந்தக் கேள்விக்குப் பயன்தரக்கூடிய பதில் இல்லை

கே: கனவில் இன்றியமையாதது என்ன?
ப: எதுவுமில்லை; நீர், காற்று,
மொழியும்கூடத் தேவையில்லை

கே: கனவுப்பிரதேசம் என்ற ஒன்று உண்மையில் உள்ளதா?
ப: இந்தக் கேள்விக்கும் பயன்தரக்கூடிய பதில் இல்லை

கே: கனவு காணத் தொடங்கிவிட்டு, பின் நிறுத்திவிட்டால்
தீங்கு ஏதும் ஏற்படுமா? எந்தவிதத் தீங்கு ஏற்படும்?
ப: இந்தக் கேள்விக்கும் பயன்தரக்கூடிய பதில் இல்லை

கே: கனவினைப் போற்ற மந்திரங்கள் உண்டா?
ப: 'கனவு எல்லாவற்றுக்கும் முதன்மையானது',
'நாம் கனவிலிருந்து பிறந்தோம்'


பார்வை - 3 : வெளி

பார்வையின் கேள்விகள் நிச்சயமற்று நீந்துகின்றன;
கனவு வெளியும் காண்பவர் வெளியும்
(இவற்றில் நீர் எது, சாயம் எது எனத் தெரியாது)
நீருக்குள் சாயம் போல ஒன்றினுள் ஒன்று நுழைகிறது


பார்வை - 4 : சுயம்

04.01. கனவென்பது இன்பமல்ல

04.02. சுயம், முகத்தை அணியாமல் கனவில் வரும்

04.02.01. முகமூடி அணிந்து கொண்டு கனவு கண்டாலும்,
சுயம் கனவில் வரும்

04.02.02. சுயம் தொலைவதற்கான இடங்கள் கனவில் உண்டு
(எ.கா: பாறைமேல் அமர்ந்து இடதுபக்கம்
திரும்பிருக்கும் அலகிழந்த பருந்து)

04.03. கனவு பரிமாணங்களை அழிக்கிறது

04.03.01. கனவில் தெரியும் தரை உண்மையல்ல

04.03.02. கனவில் எல்லைகளைத் தேடக் கூடாது

04.03.03. வானத்தையோ, நிலத்தையோ கனவில் காண்பது
சுயத்தின் மதிப்பைக் குறைக்கும்

04.03.04. எல்லாக் கனவுகளும் ஏறக்குறைய முடிவு பெறாதவை

***

August 5, 2008


ஒரு கோடு-மறு கோடு அல்லது தூண்களின் பாடல்

உன்னுடைய விருப்பவுணவுகளின் அளவும்
பட்டியலும் சிறுத்துப் போவதையும், சிறுத்துப் போன
உனது உடை குட்டிப்பிசாசுக்கு அணிவிக்கப்படுவதையும்
உன் நண்பர்களிடம் எச்சரித்தாய்

உன்னுடைய சொற்களிலிருந்து எனது இரண்டாவது
மொழியை நான் சீரமைத்துக் கொண்டிருந்தபோது
சுவர்களும் எறும்புகளும் பண்டங்களும் சொன்னது
கவனிக்கப்படாமல் தொலைந்துபோனது

எங்கோ வேறுபொழுதில் வைத்த எதையோ,
நீ தேடிக்கொண்டிருப்பாய்; நீ தேடுவது கிடைக்கவில்லை
என்றால், என்னிடமிருக்கும் பொம்மையைப்
பறித்துப் பதுக்கிவைப்பாய்

'நல்ல அடையாளமாய்' வீட்டு முகப்பிலிருக்கும்
தூண்களில் ஒன்றில் சாய்ந்துகொண்டு, தோட்டத்திலோ
தொட்டியிலோ பூச்செடி வைக்கமுடியாத ஆதங்கத்தை
அம்மா பாடிக்கொண்டேயிருப்பாள்

July 22, 2008


நட்சத்திரம் எப்படி உருவாகிறது?

நமக்கு சூரியனைத்தானே நன்றாகத் தெரியும், ஆதலால்,
சூரியனை வைத்துத்தான் நட்சத்திரத்தைப் பற்றி சொல்லமுடியும்;
சூரியன் எப்படித் தோன்றியதோ, அப்படித்தான் நட்சத்திரமும் தோன்றியது

தன்னுடைய நிறத்திலிருந்து எடுத்த நீலத்தை,
தன்னுடைய நிறத்திலிருந்து மாறுபட்ட பின்புலமாக விரித்து,
(அந்தப் போர்வைக்கு வெளியில்தான் நட்சத்திரங்கள் இருக்கின்றன!)
ஒப்பற்ற முறையில் ஊர்ந்து வருகிறான், சூரியன்!
அந்தக் கலைநிகழ்வை உங்களால் காணமுடிகிறதா, இல்லையா?

சூரியன் நம் மீது மட்டுமல்ல, தாவர விலங்குகளிடமும்
ஆதிக்கம் செலுத்தி, இரவை ஒரு சடங்காக மாற்றியிருக்கிறது;
இல்லையென்றால், நாம் இரவிலும் அல்லவா வாழ்ந்துகொண்டிருப்போம்?
ஆனால், இன்றைய நாள் வரை வௌவால், ஆந்தை,
சூரியகாந்தி இவற்றுக்கு நாசூக்கென்பது என்னவெனத் தெரியாது
என்பது நாம் வெளிப்படையாக வருந்தக்கூடிய அளவிலே இருக்கிறது,

இங்கே நிலவைப் பற்றி சொல்லியாக வேண்டும் -
அது சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி
(அப்படி வாங்குவதாலும் நமக்கு அருகாமையில் வசிப்பதாலும்,
நிலவைச் சூரியனின் நிழல் எனச் சொல்பவர் உண்டு),
சடங்குகளைச் சரிபார்க்கும் பணியை இரவெல்லாம் திறம்படச் செய்கிறது;
ஆதலால், நாம் நினைத்ததுபோல நிலா, சூரியனுக்குப் போட்டி அல்ல,

சரியாகச் சொல்லவேண்டுமானால்,
சூரியனுக்கு எதிரியாய் இருப்பவை, தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களே!
நட்சத்திரங்கள், சூரியனைப் போல சுடுபவை என்றாலும்,
கண்ணுக்குப் புலப்பட்டும், புலப்படாமலும் இருக்கும்
தூரத்தினாலேயே, கனவில் நன்றாகக் காட்சி தருகின்றன;
இப்படித்தான் அவை நட்சத்திர மதிப்பைப் பெறுகின்றன

July 12, 2008


கடலிலிருந்து நிலத்திற்கு வீசும் காற்று

கடலுக்கும் நமக்கும் நடுவில்
கட்டிடங்கள் இருக்கின்றன, சமைக்கப்பட்ட மீனைத்
தழுவி வந்த காற்று, குறுகலான தெருவில்
நடந்துகொண்டிருக்கும் நம்மையும் தழுவிச் செல்கிறது,

வீட்டுக்குள் மறுஉரு பெற்று
சன்னல்வழி வெளிவரும் மின்னணுக்குரல்கள்
உயரம் குறைந்த அலைகளின் ஓசையில் கலந்து
நம் மௌனத்தின் பின்னணி மட்டும் மாறுகிறது,

நாம் மௌனத்தைத் தொடர்கிறோம்,
உன் பாதங்கள், நான் அவற்றைப் பார்ப்பதற்குச்
சற்றுமுன்னர்தான் பறிக்கப்பட்ட மல்லித்தழையின்
வேர்க்கிளைத்தலைப் போலிருக்கின்றன,

கால்கள் தரும் சுதந்திரத்தின்
சாத்தியங்கள், ஒவ்வொரு முறையும் நம்மை
நெடுந்தொலைவுக்கு அழைத்துச் செல்கின்றன,
நாம் அதே கால்களுடன் வீட்டினுள் நுழைகிறோம்

July 2, 2008


'இரவைக் கைப்பற்றி'

'எதையும் எவ்வித பிரமிப்பும் இன்றி காணும்'
P.ன் ஓவியங்களில், பலவேறு வடிவங்களில்
நிலவு சிந்துவது ஒளியா, ஒளியென்னும் மாயமா
என்பது விசாரணைக்குள்ளாகியிருக்கிறது

பூமியின் குறுக்காக ஓடுகிற ஓர் ஆற்றுவரி
மீது பறக்கும் நாரை, நீரில் மிதக்கும் நிலவு,
இரண்டும் முறையே மீனாலும் நாரையாலும்
இழுத்துச் செல்லப்படுகின்றன கடல் வரையிலும்

நட்சத்திரக்கொத்துகள் வரை பரவிய ஆழமான இரவு
பகலைவிடப் பெரிதானது, பாதையில் படர்ந்து,
கூரையின் மேலும் கீழும் படர்ந்து, அனைத்தையும்
அது நனைக்கிறது, அல்லது அணைக்கிறது

June 23, 2008


பயணியைத் தொலைத்த பயணம்

வெளிச்சத்தையும் எடையையும் வெளியில் எறிந்த பிறகு
வேகம் மட்டுமே ஒளியாகிறது, வண்ணம் என்பதே
வடிவமாக இருக்க இயலும் என்பதன் ஆதாரங்களை
வானில் காண்கிறான்

பிம்பங்கள் தந்து சுமை கூட்டும் காகிதமும் பேனாவும்
கண்ணாடியும் விடுத்து பயணிப்பவனுக்கு
காகிதங்களின், கண்ணாடியின் எல்லைகளுக்குள்
பயணமென்று ஒன்று உண்டா?

குறுக்கிடும் ஆற்றின் கரையோரமாய் நடந்து
படகை அல்லது பாலத்தைச் சந்திக்கும் வரை
அவன் ஆற்றின் பயணத்தை ஆடையாக அணிந்துகொள்கிறான்

வயலில் பெய்யும் மழையில் மென்நினைவுகளோ
சுயமௌனமோ மேலெழும் முன்னமே
மழையின் சத்தம், அவனைக் கரைத்துக்கொள்கிறது

June 11, 2008


மரத்தின் பாகங்கள்

இளங்காலையில், மதிய உச்சியில்,
இன்னபொழுது எனச் சொல்லமுடியாமல்
மாறிக்கொண்டிருந்த பொழுதுகளில்,
பொழுதுகளை அறியாமல்,
அறிய விரும்பாமல் கழித்த கால‌ங்க‌ளில்
இம்மரத்தினடியில்தான் நாமிருந்தோம்

சொரசொரப்பான அடிமரத்துப்
பட்டைகளின் மீது விளைந்த
கிளர்ச்சியில் கண்மூடிக் கிடந்தோம்,
இன்று கிளைகளுக்கிடையே காணும்
சிறுசிறு வான்துண்டுகளை,
எப்பொழுதிலும் நாம் கண்டதில்லை

தயங்கித் தயங்கி அருகே வந்து
சென்ற பருவத்து வித்துக்களையோ
எறும்புகளையோ கொத்திய பறவையையும்
முன்பு மரத்திலிருந்து
கேட்ட ஒலிக்குறிப்புகளையும்
நாம் பொருத்திப் பார்த்ததில்லை

விரும்பிய தூறலையும்
எதிர்கொள்ள இயலாத சுழ‌ல்காற்றையும்
ந‌ம்மோடு அனுப‌வித்த‌ இம்ம‌ர‌ம்
இவ்வாண்டில்
பூக்கும் ப‌ருவ‌த்தை எட்டும்முன்
நாம் பிரிந்துவிட்டோம்

ந‌ம்மைப் பார்த்துக் கொண்டே,
நம் பேச்சுக்களையும்
நம் மௌனங்களையும் கேட்டுக் கொண்டே,
மரம் ஓர‌ங்குல‌மாவ‌து வ‌ள‌ர்ந்திருக்கும்,
ந‌ம் அருகாமை
அத‌ற்கு உர‌மாக‌ச் சேர்ந்திருக்கும்

சாய்வாக விழுந்த வெயிலின் மீது
மழை விழுந்த‌தில் வானவில் தோன்றும்
வாய்ப்புள்ள‌ திசையை
கால்க‌ளுக்கு நினைவிருக்கிற‌து,
ம‌ழையீர‌த்தில் ம‌ர‌ம் சிந்திய‌ பூக்க‌ளின் மேல்
ம‌ர‌ம் மேலும் ஈர‌த்தைச் சொட்டுகிற‌து

June 5, 2008


சொல்லாலான‌வ‌ன் அந்தியிட‌ம் சொன்ன‌து

குளிர்ந்த காற்றில் சாம்பலாய் மிதக்கும்
அதிகாலை வெளிச்சத்தில், எனது முதலெழுத்தைத் தேடி,
என் ஞாபகத்தைப் ப‌ல‌ப்ப‌டுத்திக் கொள்கிறேன்

பூக்களுக்காக‌, சிறுமி குடம் குடமாய் நீரூற்றுவ‌தும்,
நிலவொளியின்போது எழுத்துகள் மரமேற, பழங்கள் தரைவிழுவதும்,
தொடர்ந்து எழுத்துகள் விழுவதும், அருகில் நிகழ்வது போல் கேட்கிற‌து

விடைபெறுத‌ல்க‌ள் நேர்கிற‌ அறைக‌ள், என் வ‌ழ‌க்க‌மான‌
க‌ற்ப‌னைக‌ளை நிர‌ப்புகின்ற‌ன‌; ந‌ட‌மாட்ட‌த்தையும் பெய‌ர்க‌ளையும்
இழந்துவிட்ட இந்தத் தெருக்க‌ளைக் க‌ட‌ப்ப‌தென்ப‌து முடியாம‌ல் போகிற‌து

என‌து புத்த‌க‌ங்க‌ளுக்குள்ளே க‌ண்டுபிடிக்க‌ப்ப‌டாமல் ம‌றைந்திருக்கிற‌
ம‌வுன‌ங்க‌ளைப் ப‌ற்றி ஏதாவது சொல்லிட வேண்டுமென்றால்
அவை சிறிய‌ கீற்றுக‌ளே என்று சொல்வேன்

May 22, 2008


நிழல்கள் வாழ்வது எங்ஙனம்?

உன் நினைவிலிருந்த சித்திரம்
அழிந்துகொண்டிருக்கிறது, நெஞ்சின் துடிப்பும்
சித்திரத்தின் கனமும் அதிக‌ரிக்கிற‌து,
அவ‌ன‌து கூடத்தில் நீ காத்திருக்கும் வேளையில்

கருநீல உடையில் நீ பொருத்தமற்று நிற்கிறாய்,
அவன் "வண்ணங்கள் கொண்டு வந்திருக்கிறாயா?"
என்று கேட்டுப் புறம் திரும்புகிறான், பின் திரும்பி
உன் முக‌த்தில், "கண்ணீருக்கு நிறமில்லை" என்கிறான்

"சித்திரத்தின் நினைவுக‌ள் உன் இரத்தத்தில்
எஞ்சியிருக்கலாம், சிவப்பு வண்ணம்
நினைவுச்சின்னத்தையே உருவாக்கும், அவ்வுருவத்தின்
விழிக‌ள் இரக்கத்தையல்லவா எதிர்நோக்கும்?”

”காலம், ஓர் ஊமை போல‌ச் சண்டையிட்டு
நிறங்களை மங்கச் செய்கிறது, நீயே சொல் -
நிறப்பிரிகையின் எந்தப்புள்ளிகளைக் கலந்தால்
சித்திரத்தின் முந்தைய‌ நிறம் கிடைக்கும்?"

அவ்வோவிய‌னின் க‌ண்க‌ளைக் க‌ண்ட சித்திரம்
ப‌ழைய‌ கனவொன்றின் நிழல்க‌ளாய் மாறி
தன் வசிப்பிடமாக உன்னைத் தேடுகிறது,
நீயோ, உன் வீட்டிற்குள் சென்றுவிட்டிருக்கிறாய்

May 19, 2008


ஒரு விமரிசனத்தின் அதிகாலைகள்

நீ தெரிந்தெடுத்த‌ சொற்க‌ளையே
அவன் கையாளக் கூடும்;
தோல்விகளுக்கு ஆறுதல்
தருபவனல்லன் அவன்;
விருந்தோம்ப அழைத்து வராதே!
எழுத்துக‌ளுக்கு வாச‌ம் த‌ரும்
காகித‌ங்க‌ளின் இயல்பு ப‌ற்றியும்
தேவ‌தைக‌ளை ஈர்க்கும்
காந்த‌க்க‌ல் ப‌ற்றியும்
இர‌வு முழுக்க‌ பேசிவிட்டு
உனது சந்தேகங்களுக்குப் பதிலுரைக்காமல்
அதிகாலையில் விடைபெற்றுச் செல்வான்;
நீயும் அவனும் ஒரே உலகில்
வாழ இயலுமா,
என்னும் கேள்வியில் முடியலாம்
உன் தினசரித் தேடல்கள்;
உன் நினைவிலிருந்து
அவன் நீங்க ஆகும் காலத்தை நீட்டிக்கும்படி
வினைகள் தொடரலாம்

May 16, 2008


அருவியின் உய‌ர‌மும் ஆற்றின் தொடக்கமும்

தாம‌த‌ம் ப‌டிந்த‌ கால‌டியில், ப‌ச்சை எஞ்சிய‌
ம‌ஞ்ச‌ள் இலை, காற்றிலாடி விழுகிற‌து; மேலே,
ம‌ர‌ உச்சிக்கு அப்பாலே, முன்னே பறந்திட்ட

வ‌ழிசொல்லி, மெதுவாய் குழுவுள் க‌ரைந்துவிட, அதை
வேறு நாரை நிறைக்கிற‌து; இன்னும்
நேர‌ம் இருக்கிறது, மறையும் க‌திரின் நிழ‌லுக்கு

இருளில் முழுதாய் ம‌றைந்துவிட; புவி சுற்றும்
திசைவழியில், இன்னும் தொலைவு இருக்கிற‌து,
புதிதாய் ஒளியின் க‌ண‌த்திற்கு

May 10, 2008


மலையுச்சியைத் திடமாக்குதல்

தாளத்தின் நெளிவுகளை
ரீங்காரத்தினுள் ஏற்றுகிறாய்;
பூவாக இருப்பதற்கான
உத்தரவாதத்தை பூ தருகிறது;
வார்த்தைகள் நிச்சயமாகி
பருப்பொருளாகின்றன;
கோட்டையின் வரைபடங்கள்
மீண்டும் சரி பார்க்கப்படுகிறது.

May 5, 2008


தகவமைப்பின் தட்பவெப்பம்

உன‌க்குத் தெரிந்திருக்கிறது,
எப்போது குதூகலிக்க வேண்டும் என்பது,
எப்போது விட்டுகொடுக்க வேண்டும் என்பது,
எப்போது துக்கப்பட வேண்டும் என்பது

April 29, 2008


இன்னுமொருவித‌மாய் வான‌ம்

அரிய‌, க‌ல‌ப்ப‌ற்ற‌, வ‌லுவான‌
உலோக‌த்திற்குப் ப‌திலாக‌, தினமும்
வெளிர்நிற‌ப் பூக்களைப் பூக்கும் கொடியினைக் கொண்டு
கிரீட‌ம் செய்யச் சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு,
பூவையோ, ஏன் கிரீட‌த்தையோ கூட‌,
ஆளுக்கு ஒன்றென கொடுத்துவிடவேண்டும்

கிரீட‌த்தைச் செய்த‌வ‌ரும், அணிப‌வ‌ரும்,
அவ‌ர் ஒருவ‌ரே ஆனாலும்,
கிரீட‌த்தின் நிழ‌லைக் க‌ண்டு க‌ண்கூசுப‌வ‌ர்க‌ளிட‌ம்,
'கிரீட‌ங்களை ம‌ன்ன‌ர்தாம் அணிய‌வேண்டும்'
என்ப‌தைச் ச‌ளைக்காம‌ல் ம‌றுக்கும் போதுதான், அணிந்தால்
கழற்றமுடியாத பிரச்சினையை அது த‌ருகிற‌து
என்னும் உண்மை அவ‌ர்க‌ளுக்குப் புரியும்; க‌ண்ணாடியில்,
தலை அல்லது கிரீட‌ம், இதில் ஒன்று மட்டுமே
தெரிகிற பிரச்சினையும் அதைப் புரிந்துகொள்ளும் திற‌மும்
அவ‌ர்க‌ளுக்கு வாய்க்கப் பெறவில்லை

'எல்லோருக்குமான கிரீட‌ம்,
வான‌ம்தான்', என்னும் வசனத்திற்குள்,
'இப்போதுதான் பிற‌ந்த‌ குழ‌ந்தைக்கு,
இத்த‌னை க‌ன‌மாய்த் தெரியும் கிரீட‌ம் எத‌ற்கு?'
என்கிற‌ கேள்வி மறைந்திருந்தாலும்
வான‌த்தையும் கிரீட‌த்தையும் பற்றி
தங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்வ‌து
த‌த்துவ‌வாதிக‌ளின் ப‌ணிதானே?

April 24, 2008


பால‌த்தின் தூண்க‌ளுக்கிடையேயான‌ தூர‌ம்

கண்ணாடியைப் பார்க்க மறுப்பவனின்
அறியாமையை நீ நம்ப ஆரம்பித்த பிறகு, அது
உன்னைப் பீடித்து, இப்போது பரவிக் கொண்டிருக்கிறது

உன்னிடம் இருப்பது ஒளியா, இருளா
என்று தெரியாத நிலையில், அறியாத ஊரின் தெருவில்
நின்று, பகிர்தலைப் பற்றி என்ன சொல்லப் போகிறாய்?

வார்த்தைகளையும் முகங்களையும் விற்பவனின்
உதவியுடன் நீ கவிதை எழுதிய பின், எஞ்சியிருக்கும் இரவை, உன்
பிம்பத்தைச் சரிசெய்ய செலவிடாமல், விண்ணில்
எறிந்துவிட முடிவெடுத்திருக்கிறாய், சரி, சற்று இளைப்பாறு!

ஊற்றுக்க‌ண் அ‌ற்ற‌ பிரகாசமான ஒளியை, நேர்ப்படுத்தி,
பஞ்சத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் பாலம் அமைக்க
ஒரு தூணாக உன்னை நிறுவிக்கொள்கிறாய்

April 17, 2008


சென்னையின் நீச்சல்குளங்கள்

வேறிடத்தில் இருக்கும் வேர்கள், பூக்க‌ளுக்கு வேருண்டு என்ப‌து,
வேர்க‌ள் பூப்ப‌து, நீர் விநியோகம்-இவை, வான், கடல்,
நட்சத்திரங்களைப் போல அற்புத‌மாயிருக்கின்ற‌ன‌

இடங்களை நகர்த்தும் ச‌க்க‌ர‌ உருளைகளாய்
எண்க‌ளைத் துற‌ந்த‌ கடிகாரங்கள்; நொடிமுள்ளின் சத்தம்,
பிற‌ எல்லாவற்றிற்கும் சுருதியாய் உதவுகிறது

நிலத்திலும் காற்றிலும் நீல‌த்தைப் பரப்பும் இரவும்
பகலும், த‌ன்னையே உண்டு வாழும்; வானத்தையும்
நிலத்தையும் இழந்த பறவையாகிக் கொண்டிருக்கும் நகரத்தில்,

வாசல்கள் தெற்கைப் பார்த்திருக்கின்றன; வாசலற்ற
வீடுகள், கடலிலிருந்து எழுந்து வரும் சூரியனிடமிருந்து
மறைந்திருக்கும் மரநிழலில்

March 23, 2008


பனியின் ஓய்வுநேரங்கள்

நான் 104 தெருக்கள் தாண்டிச் செல்கிறேன்
பனிக்கட்டிகளைச் சீராய் ஓடும் நீராக மாற்றும் பணிக்கு,
நாளும் எதிர்ப்படும் ஒரு-கண்-சிறுத்தவன்
விற்றுக்கொண்டிருக்கிறான் விற்கக்கூடிய ஏதோ ஒன்றை

வெற்றுக்காகிதத்தின் வெம்மையைப் பூசி வருகின்றன
என் விடுமுறை நாட்கள், நான் வண்ணங்களிலிருந்து
உருவங்களைப் பிரித்தெடுக்க முயலுகிறேன்,
பச்சைக்காகிதங்கள் என்னைச் சுற்றிப் பறக்கின்றன

பயம் காட்டும் உருவங்களை வரைந்துகொண்டே
நான் பசியாறுகிறேன், நான் ஏறெடுத்துப் பார்க்கும்போது
போதை மறுக்கும் ஊமை வானத்திடம் கேட்கிறேன்:
நீர் ஊற்றாத மேகங்களை நீ என்ன செய்கிறாய்?

அதனிடம் சொல்கிறேன்: ஆற்றுக்கு அப்பால்
இலையற்ற மரங்களை அலைப்படுத்தும் மிகுகாற்று,
கிளைகளில் அமர்ந்திருந்த கரும் பறவைகளோ
அக்காற்றில் மிதந்து மிதந்து மேலேறும்,

அங்கே சுள்ளி பொறுக்கவிடாமல் இடைஞ்சல் தரும்
விலங்குகளிடம் கதைநெய்யும் தந்திரங்களையும்
கதையிருந்து தப்பித்தலையும் சில சிரிப்புகளோடு பேசி
சற்று களைப்பாறுவேன் வேறொரு காலத்தில்

March 4, 2008


உள்ளடக்கம்

முழுவதும் வெண்பக்கங்களாய் திருத்தப்பட்ட இந்தப் புத்தகம், முந்தைய பதிப்புகளில் வார்த்தைகளின் வரலாறைச் சொல்லியது எனவும், அவற்றிற்கிடையே பொதுவாய் காணப்பட்ட வார்த்தைகள் ஒரு சிலவே, அவை வெவ்வேறு இடங்களில் அல்லது வேறு பொருளில் அமைந்திருந்தன எனவும் சொன்னவனுக்கு இதுவரை எத்தனை பதிப்புகள் கண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை

இப்புத்தகத்தை வாசிக்க உதவும் கையேடு ஒன்றை எழுத முயற்சிக்கும் உனக்கு, தாள்களில் அசைந்து கொண்டிருக்கிற மௌனத்தை முகர்ந்து அறியவும், சுற்றி வந்து கொண்டிருந்த வார்த்தைகளை தன் மையத்தினுள் ஈர்த்துக் கொண்ட மௌனமது என்றும் தெரிந்திருக்கவேண்டும்

January 23, 2008


உன்னுடைய வெளிச்சம்

நீ ஆலோசனை பெறும் மனநல மருத்துவரின் அறையில்
பார்த்த நட்சத்திரங்கள், இப்போது வானில் சிதறியிருக்கும்
ஒழுங்கிலேயே இருந்து, உன் நம்பிக்கையை ஒளிரச் செய்கின்றன

இரவுணவை அளவுக்கதிகமாக,
பேரதிகமாக, சுயநினைவிலிருக்கும்போதே உண்ணுவதை,
அடுத்த சந்திப்பில் அவரிடம் நீ சொல்லிவிடவேண்டும்

அடுத்த சூரியோதயத்தை முன்னோக்கும் உன் ஆர்வம்,
அதன் நேரத்தைத் துல்லியமாகச் சொல்லி, மகிழ்ந்து,
விடைபெறுவதை உன் வழக்காக்கி இருக்கிறது

என்னதான் முழுதாகத் திறந்திருந்தாலும்,
கதவு மூடியிருப்பதாக உனக்குத் தோன்றுகிறது,
சூரியன் வீட்டிற்குள் வராத பொழுதுக‌ளில்

முற்காலத்தில் நீ எழுதிய 'முழுநாள் சூரியனை'
எனத் தொடங்கும் கவிதையில், அச்சூரியனிடம் நெருஞ்சிப்பூ கொண்ட
பொருத்தமற்ற கோபம் எனக்கு இன்னும் மறக்கவில்லை

January 18, 2008


எல்லைகள்

தானும் கடலும் வேறுவேறு என்று புலம்பித்திரிந்த மீனை
கடலைத் தன் தாயெனச் சொன்னவன் அள்ளிப் போக
கரை மீதேறிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கடல்.

January 10, 2008


கதையின்பம்

நானோ நீயோ எளிதாக மறுத்துவிடக்கூடிய
சம்பவங்களைக் கொண்டிருந்தாலும், என் கதையைத்தான்
நீ எழுதியிருக்கிறாய் என்பது தடயங்களில் தெரிகிறது:

வெயிலுடன் அவன் பேசிக் கொண்டிருக்க, அவன் நிழலிருந்த சிறு பூ
காற்றில் ஆடி, அவனறியாமல் எட்டி எட்டி சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்க,
அவனது வயிற்றில் பசி மெதுவாக எழ...

சங்கேத மொழியில் செல்லப் பெயராய் தொனிக்கும்
ஒரு நபருக்குச் சமர்ப்பித்திருக்கிறாய், உன் புத்தகத்தை;
அது ஒரு பிராணியாய் இருக்கலாம் என்பது என் ஊகம்

'என் ஊனம் ஒரு வியாதி போல குணமாகி விடும்'
என்று நம்பிக்கையான ஒரு கதைமாந்தர் சொல்வது போல்
ஏதாவது ஓர் அத்தியாயத்தினை நீ முடித்திருக்கலாம்

ஆனால், பூவின் ஓரிதழ் மட்டும் வாடியிருக்க,
அவ்விதழை உயிரூட்ட அதன்மீது ஒரு துளி ரத்தம் சிந்தியது போல்
மேலட்டை அமைக்கப்பட்டிருப்பது ஏன்?