July 12, 2009


புலன்கள் எரிந்து அணையும் ஒப்பனையறையில்

1

திசைகளை எல்லாம் அழித்துவிட்டு
இந்தச் சுவர்கள் நெருங்கி வருகின்றன,
இருளைச் சுரந்துகொண்டிருக்கிறது அறை,

முதிர்சிலந்தியின் வலையைப் போல
நான் அசைந்து கொண்டிருக்கிறேன்
நிலவொளி நுழையாத இந்த அறையில்,

நகர இயலாத பாறையின் மீதேறித்
தவழும் நீரைப் போன்ற இசை
கேட்டுக்கொண்டே இருக்கிறது அறைக்குள்


2

ஆமாம், ஆமாம், இந்த அன்பு எல்லை கடந்தது,
ஆமாம், ப‌லனில்லை! ஒரு புர‌ட்சிவீர‌னாவ‌தென
முடிவெடுக்கும்போதே நான் தோற்றுப்போனதை உணர்கிறேன்,

நான் வேட்கையின் மீதேறிப் ப‌ய‌ணிக்கிறேன்,
துதிக்கையின் வ‌ழி யானையின் மீதேறிவிடுகிறேன்,
என் கைக‌ள் தளராமல் முரட்டுப்ப‌ணியைச் செய்கின்றன,

என் மூச்சின் ஒவ்வொரு இடைவெளியும் என் காலடியும்
ஒரு ஒப்பனையழிந்த விலங்கினை நினைவூட்டுகிறது,
நான் சுயசரிதையை எழுதுவதிலும் தோற்றுப்போகிறேன்


3

பாதங்கள் ஆட ஆட,
நிலம் உருமாறிக் கொண்டிருக்கிறது,
நீர்க்குடுவை மூச்சுக்காற்றில் உலர்ந்துபோகின்றது!

’இறக்கும் வரை இது என் உடல்’!
இதற்குத் திறவுகோல் வேறில்லை,
இது மர்மக் குகையுமில்லை!

உடலை மலரச்செய்யும் நடனம்
நடுநிசியைக் கடந்துவிட்டது, உடல்கள், உடல்கள்,
எங்கும் முகங்களை இழந்துவிட்ட உடல்கள்!