May 20, 2011


போதுமான காரண காரியங்கள்

நான்கு பக்க விளிம்புகளில் தடவி
படிவத்தில் ஒட்டிய நகையில்லாத புகைப்படம்
பார்த்திருந்தபோது மெய்மறந்த நொடிகளில்
பசைவிரல் துடைத்த சுவராய்
பிசுபிசுக்கும் கீழ் தளம்,
அறை சிறிதானது, உள் நுழைந்ததும்
ரொம்ப மோசமில்லை,
எங்கெல்லாமோ சுற்றி, மிக்க தேடலுக்குப்பின்
ஒருவழியாக முடிவெடுத்து
வாங்கிய மரூன் சோபாவில் தலைசாய்த்து
கூரையில் பார்வை நிலைத்தது,
மேல் குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களை
தாங்கிநிற்கும் கூரையின் பொறுப்பை நினைத்து
தினசரிகளைக் கலைக்காமல்
அடுக்கியதன் அருகே
பொதுவாக அணைத்தே
இருக்கும் தொலைக்காட்சியில்
தூசுப்படலம் தாண்டி, அசையாமல், கறுப்புப்பிரதியாக
அறையைக் குறுக்குவாக்கில்
பெரியதும் சிறியதுமாக பிரித்த சோபாவில்
கூரையிலிருந்து விழுந்த பல்லியாய்

May 10, 2011


கூர்

நம் உள்ளம் உள்ளங்கையளவே மலரும், அவ்வளவே வளர்ந்த உருவம்,
அரிசிமண்டியின் முன் இரண்டு கால்களில் எக்கி நின்ற சுண்டெலி
நுகரும் உரிமையில் நீண்ட வாழ்வில் கூனேறிய அரிசிக்கடைக்காரரிடம்
சத்தமாகக் கேட்டது ‘பச்சரிசி பழையதாக வேண்டும் ஒரு கிலோ’

80 வயதுக்கனிவுடன் இருக்கைப்பள்ளத்திலிருந்து எழுந்தார், 'எவ்வளவு
தூரம் உன் இல்லம்?’ அவருக்குத் தெரியுமே ஊரின் விஸ்தீரணம்!
நுகர்வோரிடத்து நலம்பேசும் பூ வியாபாரிக்கும் உண்டு ஓர் ஆன்மபலம்,
வழியிலே புதியவனிடம் பேசும் பள்ளிச்சிறுமியின் துடுக்கு எலியிடம் -

’கூடவே ஓடிவரும் ஸ்கூட்டர் இருக்கே என்னிடம்!’, அனுபவத்தில்
நியூட்டன் போல் எடைகளையும் பல விசைகளையும் அறிந்தவர்
பல்சுவை பல்வகை அரிசி மூட்டைகளோடு நின்றிருந்தார், ‘அப்படி இப்படி
கொட்டாமல், அரிசியை மூட்டையென ஸ்கூட்டரில் பிணைத்துத் தருவீரா?

தவறிக் கொட்டினாலோ ஒரு கிலோவில் அரிசிமணிகள் எத்தனையோ,
யாரும் அள்ளமுடியுமோ? அது காக்கைக்கூட்டத்திற்கு மட்டுமே ஆகுமோ?
ஊரெல்லாம் ஓடும் பறக்கும் ஒவ்வோர் உயிருக்கும், ஓர் அரிசி
தந்தாலும், இந்த மண்டியில் ஏதும் குறைந்தது போலத் தெரியாதோ?’

ஆமாம் போலத் தலையாட்டி பக்கத்துமூட்டை அரிசியை அள்ளினார்,
’இந்தாருங்கள் பணம்’ என்று மேல் படிக்கட்டுக்குப் பாய்ந்த சுண்டெலி
வாய் திறந்து காட்டியது ‘ஒற்றை ரூபாய் நாணயம்’, கேள்வி ஒன்று
எழுந்தது சிதறிய அரிசிமணிகளைக் கொறிக்க நினைத்துப் பார்த்ததும்

’அரிசி நல்ல நயமென்றால் கிலோ நாற்பது ரூபாயெனத் தெரியாதோ?’
டிஜிட்டல் தராசில் திறந்துமூடும் சதுரங்கள், சுண்டெலியின் குரல் கனத்தது,
’என் கூட்டம் மிகப்பெரியது, எங்கும் விடமாய் உணவு கிடைக்கிறது,
அரிசிக்கு கொடுக்கும் விலையாலே நலம் பயக்கும் நம் இருவருக்கும்’!

மதிப்பாய் குனிந்து பார்த்தார் கடைக்காரர், புது வாடிக்கையாளன் தானே!
’இன்று அரிசி தருகிறேன், மறக்காது, பிறகு மீதிப்பணத்தைக் கொடுத்திடு’,
வாசலுக்கு வந்த ஸ்கூட்டரில் மூட்டையை இறுக்கம் ஏற்றிக் கட்டினார்,
சுமை தாங்காமல் அச்சு வளைந்ததும் முன்சக்கரம் ஒருபுறம் சாய்ந்தது

வளைதோண்டியின் கூர்முகத்தில் பப்பாளி விதைக்கண்கள் பளபளக்க
’சிறு பையில் கைப்பிடி அரிசி கட்டித்தாருங்கள், விடுவிடுவென
முதுகில் சுமந்து ஓடிச்செல்வேன் வீட்டுக்கு’, பூனைக்கண்ணில் படாமல்
சற்றுதூரமே போனது, யாருக்கும் சிரமமே முதன்முதல் அனுபவம்!

சிற்றெலி தத்தளித்துத்தான் இறந்தது, முன்னெப்போதுமில்லாத அடைமழை
வெறித்த மூன்றாம் நாள், மேகமூட்டம் இன்னும் கலையவில்லை!
நாற்றமெடுத்த கடைத்தெருவில் மூக்கைப் பொத்திக்கொண்ட ஊர்மக்கள்
அரிசிப்பையின் அருகில் செல்லாமல் பலசரக்கு வாங்கிச் சென்றனரே!