May 22, 2008


நிழல்கள் வாழ்வது எங்ஙனம்?

உன் நினைவிலிருந்த சித்திரம்
அழிந்துகொண்டிருக்கிறது, நெஞ்சின் துடிப்பும்
சித்திரத்தின் கனமும் அதிக‌ரிக்கிற‌து,
அவ‌ன‌து கூடத்தில் நீ காத்திருக்கும் வேளையில்

கருநீல உடையில் நீ பொருத்தமற்று நிற்கிறாய்,
அவன் "வண்ணங்கள் கொண்டு வந்திருக்கிறாயா?"
என்று கேட்டுப் புறம் திரும்புகிறான், பின் திரும்பி
உன் முக‌த்தில், "கண்ணீருக்கு நிறமில்லை" என்கிறான்

"சித்திரத்தின் நினைவுக‌ள் உன் இரத்தத்தில்
எஞ்சியிருக்கலாம், சிவப்பு வண்ணம்
நினைவுச்சின்னத்தையே உருவாக்கும், அவ்வுருவத்தின்
விழிக‌ள் இரக்கத்தையல்லவா எதிர்நோக்கும்?”

”காலம், ஓர் ஊமை போல‌ச் சண்டையிட்டு
நிறங்களை மங்கச் செய்கிறது, நீயே சொல் -
நிறப்பிரிகையின் எந்தப்புள்ளிகளைக் கலந்தால்
சித்திரத்தின் முந்தைய‌ நிறம் கிடைக்கும்?"

அவ்வோவிய‌னின் க‌ண்க‌ளைக் க‌ண்ட சித்திரம்
ப‌ழைய‌ கனவொன்றின் நிழல்க‌ளாய் மாறி
தன் வசிப்பிடமாக உன்னைத் தேடுகிறது,
நீயோ, உன் வீட்டிற்குள் சென்றுவிட்டிருக்கிறாய்

1 comment:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்பப் பிடிச்சிருக்குங்க இந்தக் கவிதையும். சித்திரம் நம்மைத் தேடும் போது நாம் காத்திராமல் சென்று விடுவது வருத்தமானது தான்.

‘பழைய கனவொன்றின் நிழல்களாய் மாறி... '