July 12, 2008


கடலிலிருந்து நிலத்திற்கு வீசும் காற்று

கடலுக்கும் நமக்கும் நடுவில்
கட்டிடங்கள் இருக்கின்றன, சமைக்கப்பட்ட மீனைத்
தழுவி வந்த காற்று, குறுகலான தெருவில்
நடந்துகொண்டிருக்கும் நம்மையும் தழுவிச் செல்கிறது,

வீட்டுக்குள் மறுஉரு பெற்று
சன்னல்வழி வெளிவரும் மின்னணுக்குரல்கள்
உயரம் குறைந்த அலைகளின் ஓசையில் கலந்து
நம் மௌனத்தின் பின்னணி மட்டும் மாறுகிறது,

நாம் மௌனத்தைத் தொடர்கிறோம்,
உன் பாதங்கள், நான் அவற்றைப் பார்ப்பதற்குச்
சற்றுமுன்னர்தான் பறிக்கப்பட்ட மல்லித்தழையின்
வேர்க்கிளைத்தலைப் போலிருக்கின்றன,

கால்கள் தரும் சுதந்திரத்தின்
சாத்தியங்கள், ஒவ்வொரு முறையும் நம்மை
நெடுந்தொலைவுக்கு அழைத்துச் செல்கின்றன,
நாம் அதே கால்களுடன் வீட்டினுள் நுழைகிறோம்

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்... இப்படியான கவிதைகளை நம்மால் எழுத முடியவில்லையே என ஏங்க வைக்கும் கவிதைகள் ...

(இதுதான் பிரச்சனை எழுதறவனிடம்... வெறும் வாசகன் என்றால் ரசித்துவிட்டோ அல்லது வெறுத்துவிட்டோ போய்விடுவான் :) )

இரா. சுந்தரேஸ்வரன் said...

நிச்சயமாகத் தங்கள் தொடர்வாசிப்பு இதற்கு உதவியிருக்கிறது! உங்கள் பாராட்டின் தகுதியை அடையும் எழுத்துக்களை எழுத முயன்று கொண்டே இருப்பேன்!

எழுதுகிற வாசகனாகிய :-) உங்களுக்கு மிக்க நன்றி!