December 16, 2010


கடைசி மந்திரவாதி

’பூமி என்னும் பாய் மீது, மனம்போக்கில், உடல்கூசாமல் நடந்துதிரியும் பூனைகளை முற்றிலுமாய் அழிக்கமுயன்று கைகூடாதவன்’ தனக்கான கல்லறையைத் தோண்டிக்கொள்ள மறுத்துவிட்டான், அது நியாயமே, ஒத்துக்கொள்ளக்கூடியதே, என்று ஒத்துக்கொண்டார்கள் சிலர்

§

ஒரு தங்க விடியலில் அவன் நீரை அள்ளி மீண்டும் கௌசிக மகாநதியில் வார்த்துக்கொண்டிருந்தபோது அருகாமையில் சென்ற ஒரு கவிஞனிடம் மெல்லிய குரலில், ”தன் மடியிலே தனக்குத் தேவையான எண்ணிக்கையில்தான் மீன்களைக் கொண்டிருக்குமாம் ஆறு”, என்றானாம், முற்றிய முருங்கைக்காயை வெட்டிச் செய்தது போல கணுக்கள் பருத்து இருந்ததாம் அவனது கைவிரல்கள்

§

அவன் கையோடு எடுத்துத்திரிந்த வரலாற்றுப்புத்தகமும் அதனுள் வைத்திருந்த ஆறு 100 ரூபாய்தாள்களும் களவாடப்பட்டு, கருணை கொண்ட சிறுநகரின் ஏரியோரத்திலும் கொல்லிமலைக் காட்டிலும் ஒரு பைத்தியம் போல சுற்றிக்கொண்டிருந்தானாம் மந்திரவாதியாய் மறுபிறவி எடுப்பதற்கு முன்பு, தூக்கமில்லாமல் இரவிலும் பகலிலும் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவனை ஆடெண்ணி என்றே குறித்தார்களாம் சிறுநகர மக்கள், சிறுவர்கள் அவனை ஆடுதின்னி என்றார்களாம்

§

ஒரு காலத்தில் யார் எந்தக் கேள்வி கேட்டாலும் அவன் வாய் திறக்காது, அவன் கண்கள் எல்லாத் திசைகளிலும் சுழலுமாம், எந்தவோர் கேள்விக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட பதில்கள் இருக்குமென தான் நம்பிக்கொண்டிருந்ததைப் பொய்யென்று நிரூபித்த பிறகே தன்னை அவன் மந்திரவாதியென நம்பினானாம்

§

அவன் புளியந்தோப்பிலே உட்கார்ந்துகொண்டு

            என்னை நானே தண்டித்துக்கொள்ள
            எனக்கு உரிமை இல்லையா?

            என்னை நானே ஏமாற்றிக்கொள்வது
            எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

            என்னை நானே தண்டித்துக்கொள்ள
            எனக்கு உரிமை இல்லையா?

            என்னை நானே ஏமாற்றிக்கொள்வது
            எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

என்று உயிரில்லாத முகத்துடன் புலம்பிக்கொண்டிருந்தானாம், தடியோடு ஓடிவந்த காவல்காரன் ’இவன் திருடனில்லை! புளியந்தோப்பிலே நுழைந்துவிட்ட பித்தன்!’ என்று வேறுவழி தெரியாமல் தடியால் ஒருமுறை புளியமரத்தை ஓங்கி அடித்துவிட்டுச் சென்றானாம்

§

அவன் மனிதரையோ பறவைகளையோ காணாத நாட்களில் சாயங்கால வெயிலை நீண்ட கூவலாக்கிக் கேட்டு அலாதி இன்பமடைந்தான்

§

December 12, 2010


உயிர் உலை

கூரான விளிம்புகளின் நினைப்பே அப்போது என்னை பரவசப்படுத்தி பரிதவிக்க வைத்துக்கொண்டிருந்தது, நான் கத்தி செய்யும் ஆசையைச் சொன்ன அன்று மாலையில் இருள் கவியும் முன்பே இரும்புக்கொல்லனைக் கண்டுபிடித்துக் கொடுத்தான் கே.வி.எ, தேசிய நெடுஞ்சாலையின் அழகாபுரி விளக்கு சந்திப்பில் இருக்கும் பட்டறைக்குப் போகச்சொன்னான், இரும்புக்கொல்லனோ, தன் தொழிலுக்கு என்னால் பங்கம் ஏதும் வந்துவிடாதென்று முதலிலேயே சொல்லிவிட்டு, நட்பு பாராட்டும் விதமாய், தனக்கென தொழில் ரகசியம் ஏதுமில்லை என்று என்னை பதட்டமில்லாமல் சகஜமாயிருக்கச் சொன்னான், நெஞ்சமெல்லாம் வியர்த்து வெற்றுமார்பிலே நீர் ஆபரணம் அணிந்தவனாய், செஞ்சூட்டிற்கு நடுவில் சூடாகிப் பழுத்த இரும்பை கனத்த சுத்தியால் அடித்து வேலை செய்தாலும், தன்னை மறந்து தன் கண்களில் திருப்தியை மின்னச் செய்யும் கத்தியாக மாறும்வரை அதைச் செய்பவன்... அவன் கலைஞனல்லவா? அவன் செய்த உருவத்திற்கு இன்னொருவன் உயிர் கொடுக்கிறானே எனும்போது, மனித ஆவேசத்துடன் உடலில் பாயும் கத்தி உள்ளே ஆழமாய் செல்லும் அதே கணங்களில் உடலின் பலவீனத்தையும் உயிரின் பலவீனத்தையும் புலனறியச் செய்வது... கலையம்சமல்லாமல் வேறென்ன? ஆனால் இரும்புக்கொல்லனைக் கலைஞனல்லன் என்றுவிட்டான் கே.வி.எ, அவன் வேற்றாருக்காக ஆயுட்காலம்வரை உழைக்கும் கருவிகளைச் செய்து தருபவனல்லவா? என்றான்

December 1, 2010


தங்கமீன்

ஆழ்கடலில்
ஜொலிக்கும் தங்கமீன்
ஆடாமல் அசையாமல் நீந்தி

November 28, 2010


”தெருப்புழுதியாய் மேலெழுந்ததே பின்மாலைப்பொழுது”

         மனம் ஒப்பாமலே அடிக்கொருதரம் ஒட்டிவைத்துப்பார்த்து
கட்டைவிரலின் பரிமாணத்தை ஒப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்,
         வெட்டப்படாமலே தப்பித்து வளர்ந்த ஆள்காட்டிவிரலின்
நகத்தின் கீழ், தொட்டுப்பார்த்த இடத்திலிருந்தெல்லாம் சேர்ந்த அழுக்கை
         கொண்டாடிக்கொண்டிருந்தார்களே அன்றொரு நாள்!
ஊருக்குள்ளே கலைந்துகொண்டிருந்த மாலைப்பொழுதில்
         தெருப்புழுதியிலே வெள்ளிப்பாதரசத்தைக் கொட்டியது போல்
நிலையில்லாமல் அவர்கள் அலைந்து கொண்டிருந்தார்களே,
         எக்கரங்களிலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்?
முரண்டு திமிராமல் தொலைந்து போனார்களோ? எங்கிருந்தோ வந்த
         இனம்புரியாத குருவிகளைத் துரத்திப் போனார்களோ?

         மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவிலே தடுமாறி நிற்காமல்
கோடைமழைச்சாரலில் உருண்டோடும் சிறிய பிளம் பழங்களாய்
         சிறுமூக்கில் வியர்வை பூத்திருந்ததே அன்றொரு நாள்!
வேறொரு நாள் மழைப்புழுக்கத்தில் விடிந்தபோது சில மணித்துளிகள்
         நகராமலே நின்றுவிட்டன, பால்மாடுகளைப் போல்,
கருவேலங்காட்டின் நடுவிலே துவங்கிய கனவினால் முகம் வீங்கி
         முதன்முறையாக பேனாவில் ஏதோ எழுதிய ஞாபகத்தில்
சீருடையணிந்து சீக்கிரமே வீட்டுவாசலில் நின்றிருந்தார்களே,
         எப்பொழுதிலே தொலைந்து போனார்களோ,
எவ்வுடையிலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்?
         மரித்துப்போன மண்புழுக்களைத் தாண்டிச் சென்றார்களோ?

         யாருமே சொல்லாமல் தாமாகவே தெரிந்துகொண்டதாக
தாமாகவே திருவிழாவுக்குத் தயாரானதாக அன்றொரு நாள்
         தமக்குப் பிடித்தமான ஆடையிலே காத்திருந்தார்களே!
கை நிறையக் கிடைத்த பழ வடிவ மிட்டாய்கள் தின்று
         நாவுகள் நிறம்மாறியதால் காளித்தாயின் குழந்தைகள் என்று
அவர்கள் சுதந்திரமாய் சுற்றிவந்தார்களே அன்றொரு நாள்!
         தெருப்பள்ளத்தில் கொஞ்சமே தேங்கியிருந்த நீரின் மேலே
தேடிக்கண்டடைந்த பெருங்கல்லைப்போட்டு நீர் தெறிக்க ஓடினார்களே!
         எவ்விடத்திலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்?
அடையாளங்களையும் தொலைத்தார்களோ என் குழந்தைகள்?
         ஓயாத பெருவிழாவில் மனம் தொலைந்து போனார்களோ?

November 18, 2010


இரண்டு வண்ணத்துப்பூச்சிகள்

ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டு
இரண்டு வண்ணத்துப்பூச்சிகள்
பூக்களையே இன்னும் பார்க்கவில்லை

October 19, 2010


மத இரவின் பாலரும்புகள்

(1)

பூனைகள் திறந்துசென்ற கதவுகளை பிறகு யாரும் தொடவில்லை,
முழுமையடைந்த இருளுக்குள்ளே கால்நீட்டிப் படுத்திருக்கும்

வீதியில், உலர்ந்த வடிகாலாய் விழும் வீட்டு ஒளி


(2)

இன்னும் இன்னும் தீர்க்கமாய், நம் கண்கள்,
அயராமல், சலுகையின்றி முரண்படும் வண்ணங்கள்

அருகருகே, துல்லியமாய் வகுத்த சின்னஞ்சிறு சதுரப் பாத்திகளில்
கருப்புவெள்ளை துருவங்கள், வீரிய காந்தப்புலத்தில்

விளையும் பயிர் நம் கனவு, நடுநிலையானது,
நெடுங்காலம் தீராத அசௌகரியம், நம் விரலசைவில்

ராஜா ராணிகள், ஓரங்குலத் தொலைவில்


(3)

நீண்ட ஆலோசனையைக் கேட்டபின்னும் அள்ளிய நீரின் முன்னும்
சலனமேயின்றி நிற்கும் நிலைக்கண்ணாடி—

தொலைக்காட்சியின் சலனங்களை மேனியிலே உலவவிட்டு
நிழல்பருத்துவிட்ட வீட்டின் இயற்பியலாய்—

நள்ளிரவு— வெண்சுவரில் ஓர் ஆணியாய்
ஒரு புகைப்படத்தைத் தாங்கி நிற்க முடியவில்லை

ஆத்மாக்கள் இறுதியில் அடைக்கலமான துருவங்களுக்கோ
குளிர், இருளுக்குப் பரிச்சயமான உருவங்களுக்கோ

மாநிலம் அதிர மதங்கொண்டு வரும் கொம்பற்ற யானைக்கோ
அது விடுதலையைப் பெற்றுத் தரமுடியவில்லை

சூரியனைத் துளியும் காணாமல் நித்தமும் தலையளவு பூ மலரும்
தலையணை உறைகளின் தாயல்ல அது

தலைமுடி பற்றியிழுக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை
முற்றிலும், காலம் தப்பிப் பிறந்த குழந்தை அது

ஈராயிரம் ஆண்டுகள், கைரேகைகள் கயிறாய் மாற
திரிக்கப்பட்ட தேர்வடக் கயிற்றின் முனையில் நங்கூரம் அது

September 7, 2010


இடக்கை வட்டம்

பெரிய குப்பைத்தொட்டியின் ஓர் உறைந்த கணத்திற்குள் சிந்திய துளி
சர்க்கரை வெல்லப்பாகில் தன் கால்களில் ஒன்று சிக்கிய தேனீயாய்
’நேட்டியோ’ ஹாலின் செப்பனிட்ட வடக்கு வாயிலில் நின்றிருந்தான் P.,
பனிப்புகையாய், கண்களின் ஆழத்தில் புன்னகையுடன் விருந்துக்கு

காலம் தாழ்ந்து அழைப்பவனைப் போல, மெல்ல, சற்று மலர்ந்து
விரிந்த தாமரை கைகளுக்குள் கைகளைப்பற்றி சொன்னான்—
“இன்று காலையில் சீவாத பென்சிலோடு எனது மகன் ஓடி வந்தான்—
’வட்டம், சதுரம், முக்கோணம் எல்லாம் எனக்கு அம்மாதானே

கற்றுக்கொடுத்தாள், நம் வட்டத்தில் யார் இருக்கிறார்கள் நமக்கென்று
உன்னிடம் கேட்டாளே, கிண்ணம் நிறைய உரித்த வெங்காயத்தை
கையிலே ஏந்திக்கொண்டு! எனக்கு அந்த வட்டத்தைக் காட்டு!’ என்றான்,
ஏதும் யோசிக்க முடியாமல், ஏது சொல்வதெனத் தெரியாமல், நான்

‘டேய், அது ரத்தச்சிவப்பு வட்டமடா’ என்று கத்திவிட்டேன், விழி பிதுங்க
அதை அப்போதே பார்த்துவிடவேண்டுமென அவன் நுனிக்காலில்
குதிக்கத் தொடங்கிவிட்டான் தத்தித் தாம் தோம் என, சொம்பு நீர்
உப்புநீராகி வயிற்றை முட்டிக்கொண்டிருக்க, சிறுநீரைக் கழிக்காமல்

குதித்துக்கொண்டே அடம்பிடிப்பவனாய், நீளமான குச்சியை, காய்ந்த
சேற்றுப்பிளவில் நட்டினாற் போல விறைப்பாக நிற்கும் இருவருடன்
ஒரு சிறுவனை, நிறமற்ற கோலிக்குண்டாக, கேலிச்சித்திரம் போல எழுதி
அவசரமாய் கரும்சிவப்பு வட்டமிட்டுக் கொடுத்தேன் இடக்கையால்

அதை அவன் தொடவேயில்லை, கோலமாவுள்ள ஜன்னலில் காக்கை
பிசிறுபிசிறாய் கரைந்து முடிக்கும்வரை என்னை முறைத்துப் பார்த்தான்,
’கூரையில்லாத சிவப்பு ஜீப்பும் மந்திரச்செருப்புகளும் வேண்டுமே,
கோலிக்குண்டு சிறுவனின் காலருகே காணோமே?’ என்று கேட்டு

பால்வண்ணம் திரிந்த முன்வரிசைப் பற்களைக் கடித்தவனிடம்
'நீயே வரைந்துகொள்’ என்று தூரிகையைக் கொடுத்து வந்துவிட்டேன்
எல்லோருக்கும் முன்பே, இங்கிருக்கும் அரசமரத்தில் ஏறியும் இறங்கியும்
தாவிச்செல்லும் அணில்களின் வாலசைவிலே மறைந்தது பொழுது”

August 7, 2010


களைப்பில்லாத பெரும்பகலில்

ஓடி, பால்யநதிக்கரையில் ஒதுங்கிய பிஞ்சுக்கோழியின் தசையைப்
போன்ற கூழாங்கல்லை வேனல்காற்று வீசும்போது தொட்டுத் தடவும் நீரலை,
அலைநீரே பாசியாகிப் பூசிய பச்சைவலைக்குள் கூழாங்கல்

பட்டுச்சரிகை இறக்கைகளில் பட்டாணிக்கல் தூக்கும் தட்டானும்
குழப்பமாய் பறக்கும் ஈரவெம்மையில் பிறந்து அன்றே இறக்கும் மழையீசலும்
முக்காலமும் ஓடும் மூலமற்ற பால்யநதியோரம் கீழிறங்கும்

ஒவ்வொன்றாய், ஒன்றையொன்று முந்தி, மந்தமான சிரித்தமுகத்துடன்
கவர்மெண்ட் விதைத்த சீமைக்கருவேலங்காட்டுக்குள், ஒற்றையடிப்பாதையில்
தாவித்தாவிச் செல்லும் மீன்தூண்டிலில் வாய்ப்புண்ணான தவளைகள்

நண்பகலில் முக்கியத்தடயமாய் நீர்க்குமிழிகள், உடன் மிதக்கும்
கண்கள் நனைந்து கண்ணிமைக்காமல் நீந்திய குட்டித்தவளைகள்
நினைத்த மாத்திரையில் தன்னுடல் எறிந்து தாவும் பால்யநதியின் நீர் மிதித்து

மூன்று சாலைகள் திசைபிரியும் பழுப்புநிலத்தில், புதுப்பல் பொருத்தி
மின்ரம்பம் அறுக்கும் வேங்கைமரத்தின் வாசனையில் ஓடும் பால்யநதியோரம்
பெருங்கண் தேரைகளின் மூச்சு மட்டும் கூழாங்கல்மீது அசைந்திருக்கும்

June 29, 2010


பேரீச்சம்பழக் கப்பல்

மூட்டை மூட்டையாய் பேரீச்சம்பழங்களைச் சுமந்து
கப்பல் நகர்ந்துகொண்டிருக்கிறது உப்புநீரின் மேல்
நெடுநாட்களாக மிதந்து செல்லும் பேரீச்சைகளின்
இனிப்பு அதிகமாகிறது நாளாக நாளாக

June 4, 2010


இரவும் பகலும் புளிக்கும் திராட்சை

(1)

பொய்த்துப் பொய்த்துப் பின் வேர்களின் நிசப்தம் நனைக்கப் பெய்த மழை
மேம்போக்காய் வெறுப்பு கொண்டு கழுவிய இலகுரக வாகனங்கள் பலவற்றின்
சாவிகள் தொலைந்து போயின இம்மனிதர்களின் அதிகாலைக் கனவுகளில்
சீப்போ பேனாவோ நாலணாவோ போல அல்லவே இச்சாவிகள் தொலைவது

வாரநாள் விடியலில் மும்முரமான இம்மனிதர்களின் வாகனச்சாவித் தேடலில்
ஓரவிழியில் படும் தவணைக்கெடு நெருங்கிய இல்லங்களின் சாவிகளும்
அவற்றின் பிரதிகளும் மின்ரீங்காரமிடும் குளிர்சாதனப்பெட்டியின் சாவி போல
சாவியெனக் கொள்ளமுடியாதவையும் சேர்ந்தே தொலைந்தன இம்முறை

பயந்து தமக்குள் ஒருவனாக ஒளிந்துகொண்டுவிட்ட பூட்டுச்சாவிக்காரனின்
கட்டைவிரல்களைப் பழித்துப் பேசுகின்றனர் இம்மனிதர்கள் முகம் மாற்றி
பிறகு ’அவனும் பாவப்பட்டவன்தானே’ என்கின்றனர் ’நாம்’ பண்பலையில்
அடைக்கும் தாழ் மெழுகாய் உருகி அணுகும் விரலைச் சுட்டுவழியுமோ?

தம் வீட்டை விட்டு வெளிச்செல்லாமல் குணமிழந்தவர்களாய் இம்மனிதர்கள்
நகராமலே சோர்வுற்ற தம்மையே தூற்றிக்கொண்டு மறுத்துத் தலையசைத்து
விதையற்ற திராட்சையாய் புளிக்கும் இரவையும் பகலையும் ஒதுக்கிவைத்து
விளக்கொளியில் சுவர்பார்த்து உண்ணத் துவங்குகின்றனர் வீட்டிலிருப்பவற்றை


(2)

துணிக்கொடியாகிவிட்ட நாற்காலிமீது வீசப்படும் துண்டுகள் துணிமணிகள்
பரிணாமமுறும் வனவிலங்குகளாய் சுவர் படிந்து நிழலாடும் வீட்டுக்குள்
உள்ளாடை மட்டும் அணிந்து கைகள் தொங்க நிற்கின்றனர் இம்மனிதர்கள்
அரை உயிர் பெற்ற துணிப்பொம்மை போல ஆளுக்கொரு ஜன்னலில்

சூறைக்காற்றில் உதிர்ந்து காய்ந்த பூக்களின்கீழே மரவட்டைகள் சுருண்டு தூங்கும்
ஆளில்லாத நந்தவனத்தின் கிணற்றடியில் தொலைந்த சாவிகளை விழுங்கி்யவன்
பெரும்பற்களும் துளையுள்ள தலையும் கொண்ட கனத்த சாவியாகி விழுந்தான்
பூச்சியங்களின் இடமதிப்புகளை எறும்புகள் இழுத்துச்சென்ற இன்னொரு கனவில்


(3)

அள்ள முடிந்தால் கையில் அள்ளி நெஞ்சோடணைத்துக் கொஞ்சத் தோன்றும்
அழகோ அழகு, மனதை மயக்கும் பிரம்மாண்ட மெய்கொண்ட மாயக்குழந்தை
நட்சத்திரங்களையும் நாட்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது தெருவோரம்
நமத்துப்போன தீப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கிவைத்து விளையாடிவிட்டு

இம்மனிதர்கள் தம்வீடுகளில் நுழைந்ததும் வெளியேறும் குருவிகளைப் பார்த்து
பிரிந்து செல்கிறார்கள் சக்கரங்களின் ஓசைகள் தேய்ந்துபோன சாலைகளில்
காட்டுவனப்பை மீட்டுக்கொண்டிருக்கும் மதில் இடிந்த பூங்காக்களை நோக்கி
ஆங்காங்கே நின்று நின்று நகர்ந்து வேட்டை தளர்ந்தவனாய் காற்றை நுகர்ந்து

கடற்கரைச்சாலையில் நடந்துசென்ற சிலர் சாலையோரம் குழுவாய் நின்று
தரைலிருந்து உயர்ந்த சிலைகளின் அருகே தலையும் கையும் காலும் அசைத்து
இப்பூமிப்பந்து பெரிதாகிவிட்டதென வியந்த இன்னொரு காலைப்பொழுதில்
அவ்விடம் உறங்கிய குட்டிநாய் எழுந்து ஓடுகிறது குரலை மேலுயர்த்தாமல்

May 6, 2010


எக்கிளையில் கூடு

உனக்குப் பிடித்தமான ஆற்று வளைவில்
தனித்துயரமாய் வளர்ந்திருக்கும் புன்னைமரத்தின் கீழ்
வசதியாகக் குத்துக்காலிட்டு அமர்ந்து
                                                       எதிர்க்கரையின் மீது
கண்களைப் பதித்திருக்கும் ஓடக்காரா,
நீ ஏன் ஓடத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாய்?

விடியற்காலையில் தூறலாகப் பெய்த மழையில்
நனைந்த ஓடம் உலர்ந்து கொண்டிருக்கிறது,
ஓடத்தருகிலே நிற்கும் இந்தப்பெண்
                                                     பிள்ளைகளை வளர்த்து
வேற்றூருக்கு அனுப்பிவிட்டவள் -
முனகுவது போலவே அவள் பாடும் பாடலின் வரிகள்
உங்களுக்குக் கேட்கவில்லையா?

ஓ, நனைந்த குருவிக்குஞ்சுகள் இடும் சத்தத்தின் வழியே
கூடு எக்கிளையில் இருக்கிறது என
அவள் அண்ணாந்து தேடிக்கொண்டிருக்கிறாளே!
                                                                      தை இறுதியில்
சாம்பல் பூத்திருக்கும் வானத்தின்
நீர்ச்சொட்டுக்கள் சில அவள் முகத்திலும் விழுந்தனவே!

April 15, 2010


வராமல் போனவருக்கு - III

வலிச்சத்தத்திலே ஒரு பிறப்பு
உளிச்சத்தத்திலே ஒரு பிறப்பு
வரிகளாய் விலா எலும்பு

April 12, 2010


வராமல் போனவருக்கு - II

இன்று காலையிலிருந்து
கதவோரத்திலேயே
நிற்கிறது பூனை

நேற்று அங்கிருந்து
போகவும் வரவுமாய்
இருந்தது முனகலோடு

April 8, 2010


வராமல் போனவருக்கு

நான் விழித்தேதான் இருந்தேன்,
நான்கு முறை சீராகத்
தட்டுபவள் அவள்தான்

March 27, 2010


புறநகர் கட்டிடங்கள் மீது வெயில் ஓய்ந்தது

புகையும் காய்ச்சலோடு படுக்கையில் கையூன்றி அமர்ந்தவனின்
உலர்ந்த மூச்சில் அவ்வப்போது எழும் உயிர்குறைந்த ஓசைகளில்
கலந்து வளைய வரும் உணவுப்பையின் புளித்த வாசனையூடே

பூரண அம்மணமாய் ஒற்றைக்கண் போல் விழித்து மறையும்
தொலைதூரத்துச் சொற்களும் அதிஆழம் தொட்ட சொற்களும்
நெஞ்சத்தக உணர்வுகளைக் கண்டும் செய்யவில்லை ஒன்றும்

பன்னிரு இரவுகளாய் நிழற்பாசியாய் படர்ந்திருந்தது உண்மையே
ரோஜாவண்ண மொழியின் நாவில் நோயின் நச்சு வெண்மை!
உண்மையே அனிச்சையாய் நிகழும் அத்தனை அசைவுகளும்!

பழைய புறநகர் கட்டிடங்களின் மீதிருந்த வெயில் ஓய்ந்தபோது
அணிந்த கசங்கிய சட்டையின் ஜேப்பியில் துழாவும் கையுணரும்
சலவையினால் காகிதப்பொருக்குகளான மருந்துச்சீட்டு போல

பதியனிட்ட சொற்களை தெருவிளக்கொளியில் மறந்துவிட்டு
நாசியில் நறுமணம் கமழும் கணம் நிகழக் காத்திருக்கிறோம்
இடிபாடுகளுக்கிடையில் நின்று சுற்றும் நோக்கும் பூனையாய்

March 9, 2010


நவம்பர் மாத குளிர்காற்றில்

பொய்யைப் போலவே காற்றைப் போலவே
ஓரிடத்தில் நில்லாது நம் உலகம் சுழன்று நகரும்
அதன் சருமத்தில் கிளைத்திருக்கும் மரச்செறிவு
நவம்பர் மாத குளிர்காற்றில் அதிர்கிறதா சிலிர்க்கிறதா?

February 27, 2010


கவிதை என்பது தாவரமல்ல

இன்னொரு நாள் கே.வி.எ ஆரம்பித்து வைத்தான், “கவிதை என்பது தாவரமல்ல, உரமும் அல்ல, அது பூச்சிமருந்து, பூச்சிக்குத் தெளிக்கணும், மனிதன் குடிக்கணும்” என்றான், சீசாவிலிருந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த அபி வாயிலிருந்த நீரை மிடறிவிட்டுச் சொன்னான், “ஒரு சமயத்தில் வயலெலிகளை வேட்டையாட ஆட்சேர்ப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கவிஞன் என்ன செய்தான் தெரியுமா? வருத்தப்பட்டு பாட்டுப் பாடினான்” என்றான், ”அது அரூபமானது” என்று சொல்லிவிட்டு, டோனியும் அதே சீசாவிலிருந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்து சொன்னான், ”கவிதை என்பது நீர்மம் போல... நீரைப் போல, தொட்டுப்பார்க்கமுடியும், ஆனால் வடிவமில்லாதது, கவிஞன் ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைக்கிறான், ஆனால்... ஆனால், அது ஆறாகவோ, கொதிக்கும் கடலாகவோ, பேரருவியாகவோ, நீராவியாகவோ, உறைந்து இளகும் பனித்துகளாகவோ வாசகனின் மனதில் அல்லது வயிற்றினுள் மாறிவிடுகிறது என்றே கொள்ளமுடியும்-கொள்ளவேண்டும், அது அங்கே ஆக்ஸிஜனாகவும் ஹைட்ரஜனாகவும் பிரிந்துகொண்டேயிருக்கும் சாத்தியமும் இருக்கவே செய்கிறது என்று யாரேனும் சொன்னால் அதை என்னால் மறுக்க முடியாது” என்றான், எனக்குக் 'கவிதை எப்படி வேறெதுவாகவோ இருக்கமுடியும்?' என்றும் அதே ச‌ம‌ய‌த்தில் 'நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்பதைப் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே' என்றும் தோன்றியது.

January 28, 2010


ஆள்காட்டி விரலால் எளிதாக

ஓவியக்கூடத்தில் அவன் ஒரு மாலையில்
ஓர் ஏணியைச் சாய்த்துவைத்து மேலேறுகிறான்

தூரிகை மீறித் திரண்ட பசும்நெல்லிக்கனி போல
அவன் மிருதுவான உள்ளங்கையில் ஒரு விண்மீன்
சூடேறித் தேன்போல வழியும் நிறக்குழம்பு
அந்திக்காற்றோடு கலந்து கொண்டிருக்கிறது

ஏதோ ஓர் இளம்பிறை இரவில்
இயல்பாக நிகழும் விளையாட்டாக
ஆள்காட்டி விரலால் எளிதாகத்
தோண்டி எடுக்கப்படும் ஆழத்தில் புதையுமென

ஒன்பது மணிக் கரும்பலகையாய் நிற்குமே வானம்-
அதில் ஒட்டி உறைந்து ஒரு முத்தாய்
ஓர் அசாதாரண மணித்துளியில்
ஓரெழுத்தாய் உதிருமென

அல்லது விலகிச் செல்லும்
வேறொரு விண்மீனின் தலையோடு தலை மோதி
ஒளி பொறியாய் பறக்கக் காண
காட்டுமைனாக்களுக்கு வாய்க்குமோ என

விண்ணை நோக்கி அவன்
விண்மீனை பலம்திரட்டி எறிகிறான்