December 27, 2007


கண்ணில்படாமலிருப்பது

எனக்கு முன்னும்,
எனக்குப் பின்னும்,
எனக்கு மேலாக,
எனக்குக் கீழாக,
எனக்குப் பதிலாக,
நீ தேடும் பொருள் வேறெதுவோ?
நீ தேடும் பொருளாக வேறெதுவோ இருப்பதால்,
நான் இருக்கிறேன் இல்லாத ஒன்றாக.

December 3, 2007


அனுமதி

"உனக்குத் தெரியுமா நாளை 9 மணியிலிருந்து மழை பெய்யப் போகிறதென்று?"

"அப்படியா? நாம் என்ன செய்ய வேண்டும்?"

"மழை பெய்ய அனுமதித்து விடலாம்"

November 29, 2007


சற்றே குறைய

எவ்வளவு நிறைந்திருந்தாலும்
குறை குடமாக்குவது எளிது

ஆட்டத்தின் போக்கிலும் எதிராகவும்
அசையும் இடுப்பும் இயங்கும் கால்களும்
குதூகலமாக்கும் ஒரு நடையை

அப்போது வெளித் தெறிக்கும் நீர்

November 27, 2007


ஏன் இப்படி?

நீங்கள் என்ன கேட்பீர்கள்
சதா அலைந்து கொண்டிருக்கும் நாயிடம்?

நான் 'ஏன் இப்படி' என்று நாயிடம் கேட்பேன்

பதில் சொல்வதற்காக நிற்கும் நாயைப் பிடித்து
என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் நீங்கள்

நான் 'ஏன் இப்படி' என்று உங்களைக் கேட்பேன்

November 22, 2007


உங்கள் உலகம்

விவாதமின்றி எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு நல்லொழுக்கத்தை நீங்கள் கடைப்பிடித்து வருவதால் மனதில் உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உள்ளூர உங்களுக்குத் தெரியும், அதற்கு நீங்கள் அடிமையாகி விட்டிருப்பது. ஓர் ஒப்பு உதாரணமாய் நீங்கள் இருக்கிறீர்கள் என்று பிறர் சொல்வது உம்மை பாதிப்பதில்லை. ஆனால், பிறழ நேர்ந்த அந்த கணத்தில், தவறு உம்மேல் இல்லை எனினும், உங்கள் முகம் பார்க்கும்படியாய் இல்லை. இது நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டிய சமயம். நீங்கள் புழங்கும் சூழலிலுள்ள மனிதர்களையும் பொருட்களையும் இறுக்கிக் கட்டுங்கள், அவரவர் இடத்திலிருந்து அசையாமலிருக்க. நகர்தல் என்பது உங்களுக்கு மட்டுமே சாத்தியமாக ஆகட்டும். அது உங்கள் உலகம்.

November 20, 2007


ஒளிச்சிதறலுக்குப் பின்

ஆளுக்கொரு நிறத்தை எடுத்துக் கொண்டனர். வெள்ளொளி கடந்து சென்ற முப்பட்டகத்தை இனி பரணிலேற்றலாம்.

November 19, 2007


அக்கறை

நீங்கள் கேட்கலாம்
'உனக்கென்ன அக்கறை?'

மண்ணுக்காக அக்கறைப்படுபவர் நீங்கள்.
மழை விழுவதற்காக அக்கறைப்படுகிறீர்கள்.
விலங்குகளுக்காக அக்கறைப்படுகிறீர்கள்.
(மாட்டை விலங்கென்று சொல்ல முடியாது)
மாட்டின் மீது மழை விழுந்தால் அக்கறைப்படுகிறீர்கள்.

இப்படி நீங்கள் பொதுவாக அக்கறைப்படுபவராக இருப்பதால்
உம்மேல் எனக்கு அக்கறை!

June 5, 2007


சம்பவங்களின் சித்தம்

சம்பவங்களே நிகழாத உலகில்
குயிலிசையை விமர்சிக்கும் உள்ளங்கள்
மகிழ முடியாது, மகிழ்வதும் சம்பவமே!
இயல்பின் காரணங்கள் அழிந்தபின்
எங்கும் படர்ந்திருக்கும் அர்த்தமின்மையாய்
அப்போது கடவுளர்களாக இருக்கலாம்
நாம் அனைவரும்

May 26, 2007


ஓர் அறிவுரை

பாதையும் பயணமும் இன்றி
நடக்கத் தலைப்படும்போது
தலையால் நடக்கவேண்டும்

May 1, 2007


இன்னமும் நகங்கள்

பொத்தான்களின் தகைவு குறித்து
உங்கள் நிலைப்பாட்டை நேரம் சார்ந்து
வெளிப்படுத்தவே செய்கிறீர்கள்;
மறக்காமல் நினைவூட்டியில்
விரல் நகங்களை வெட்ட நேரமும் குறித்துக் கொள்கிறீர்கள்;
மெச்சக் கூடியது நகம்பொறுத்து உங்களின் கவனிப்பு;
செயல்பாட்டின் நேர்த்தியில்,
நகவெட்டிகளின் நகங்களை மிஞ்சிய பரிணாம வளர்ச்சியில்,
மகிழ இடமிருக்கிறது;
'நிராயுதபாணியாய் நிற்கிறீர்கள்!';
சிறுநகையுடனான உங்கள் பார்வையில்
ஏமாற்றமில்லை.

April 24, 2007


உதவி செய்வதன் பொருட்டு நீ அறிந்து கொள்ள வேண்டியது

நாளை உனக்குக் கிடைக்கும் ஓலையை
தானமிட்டபின் அவனிடம் வாசித்துக் காட்டு;
நட்பே ஆனாலும்
உதவியதும் மறக்காமல்
ஓலையின் சேதியைச் சொல்லு;
உயிர்காத்தாயென யாரேனும் ஓடிவந்தால்
மீண்டும் வாசித்துக் காட்டு;
உணர்ச்சிமிகு கணங்களுக்கென
மனனம் செய்து கொள்;
அது உனது மந்திரமாகட்டும்!

April 14, 2007


அனைத்தையும் அகம் கொண்டபின்
பேரொளியின் சுயம் தனியே என்செய்யும்?

_____________________________________________
* நினைவுபடுத்திய சரவணனுக்கு நன்றி

April 8, 2007


பத்தொன்பது வயதுப் பையன்
ஒரு நீளமான வசனம் பேசிமுடிக்கும்போது
பெரும்துளிகளாய் மழை ஆரம்பித்தது.
அம்மா சொன்னாள்,
'அச்சச்சோ, கொடியில் துணி காய்ஞ்சிட்டிருக்கே!'
'இல்லம்மா, நனைஞ்சிட்டிருக்கு!'
உடன் வெளிவந்த சிரிப்புடன் மகள் சொல்ல
அப்பாவும் சிரித்தார், பக்கத்து இருக்கையை பாதிக்காத வண்ணம்.
சிரிப்பு நல்ல விசயந்தானே?

முற்றும்

நிறை நிறை
பையை நிறை
தலையை நிறை
புவியை நிறை
வெளியை நிறை
வெற்றிடத்தால்
உன்னை நிறை

April 7, 2007


அருகிலே ஒரு

தொடுவானம்வரை பரவியிருக்கிறது
பச்சைப் புல்வெளி.
குறுக்காக மேற்கு நோக்கிச் செல்லும்
ஒற்றையடிப்பாதை.
அங்கும் இங்கும் தனித்தனியாய்
இன்னும் காடாக மாறாத மரங்கள்.
கிளைப்பிரிவில் பறவைக்கூடாய்
குச்சிகளும் முட்களும் அதன்மீதான வைக்கோல் பரவலும்.
இணையாய் நடக்க ஒற்றையடிப் பாதை தோதல்ல;
புல்லில் இறங்க வேண்டும்.
ஏற்கனவே இறங்கியிருக்கும் பனித்துளி
காலணியற்று நடக்கையில்
மேகத்தை உரசிச் செல்வது மாதிரியான
மிதக்கிற உணர்வைத் தரும்.
தென்றல் மட்டுமே காற்றின் வடிவமன்று.
சற்றே பலமான காற்றில்
கூடு சிறிது கலைந்து
முட்துண்டொன்று தரைவிழுந்து
மறைந்திருக்கும் புல்லினூடாக.
அடுத்த காலடியில் காத்திருக்கும்
முள்பதம் கண்டு
கைப்பிடித்து
தன்பக்கம் இழுக்குமாம் நட்பு.

(03.08.2001)
_____________________________________________
* முதல் முயற்சியிலிருந்து திருத்தப்பட்டது.

அலமாரியும் புத்தகங்களும்

வரவேற்பறையிலேயே
புத்தக அலமாரியும் காலணி ரேக்குகளும்
நகரச் சந்தடி!

அலமாரியில் இல்லா புத்தகம்
தந்ததொரு படிப்பினை
இரவலுக்கல்ல புத்தகம்!

தீண்டப்படாமல் வருத்தப்பட்டு நிற்கும்
கண்காட்சியில் வாங்கிய
புத்தகங்களில் சில!

சமையல் புத்தகம்
அலமாரியில் சேருமா?
மனைவிக்கும் எனக்கும் சண்டை!

அலமாரியில் வைக்க முடிவதில்லை
வாசிக்க வேண்டிய
சில மனிதர்களை.

(20.08.2001)

ஓவியக் கண்காட்சியும் பலூனும்

முன்னே ஒரு பரந்த மைதானத்துடன்
ஊரை விட்டுத் தள்ளியிருந்த
அக்கட்டிடத்தின்
மொட்டைமாடியில் வைக்கப்பட்டிருந்த
வித்யா-பூர்ணானந்த்-ன் ஓவியங்களைப் பார்த்துவர
மாலையில் நாம் சைக்கிளில் சென்றபோது
நீ ஜீன்ஸ் உடுத்தி தலையில் பூவும் அணிந்திருந்தாய்.
நீண்ட நேரம் அங்கிருக்க முடியாமல்
இளநீர் அருந்திவிட்டு
சைக்கிளைப் புறக்கணித்து
மைதானம் தாண்டி வடக்கே செல்லும்
இருமருங்கிலும் முட்புதர் மண்டிக்கிடக்கும்
மாட்டுவண்டிப் பாதையில் நடந்தோம்.
மேற்கிலிருந்து சூரியக்கதிர்கள்
மிகமுயன்று முட்புதர்தாண்டி
வண்டிப்பாதையின் புழுதியில்
பொட்டுக்களாய் விழுந்தன.
இன்னும் நடந்தால்
கிணறுகளையும் காற்றுடன்
பேசிக்கொண்டே நடனமிடும்
பச்சை நாற்றுகளையும் பார்க்கலாம்.
எதிர்ப்புறத்திலிருந்து
திடீரென்று சிறார்க்கூட்டம்
நம்மை கடந்து ஓடியதைப் பார்த்து
நாம் திரும்பி நடக்கவாரம்பித்தோம்.
மைதானத்திற்கு வந்திருந்த
பலூன் விற்பவன்
பலூனை சிறார்களுக்கு
இலவசமாக வினியோகித்துக் கொண்டிருந்தான்.
நீ ஓடிச் சென்று
ஒன்று வாங்கிகொள்வாய் எனக் காத்திருந்தேன்.
சிறார்களின் மகிழ்ச்சி
உன் முகத்திலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

(07.09.2001)

மழையும் குடையும்

மழையில் நனைகிறது
குடை!

*

வீட்டிற்குள் மழைநீர்
நீர் வடியும் குடை!

*

ஊனமாய் மூலையில் கிடந்தாலும்
வீதிக்கு வந்துவிடுகிறது
மழை வந்தவுடன் குடை!

*

குடைகள் தடுப்பதில்லை மழைநீரை
தரை சேராமல்!

*

நீ குடை கொணர்ந்தால்
நான் குடை,
இல்லையெனில் மழை!

( 26.03.2001)