December 27, 2009


காட்டுக்குள்ளிருந்து வெளிவரும் முகம்

நேயா சொல்கிறாள்: காட்டு உலாவுக்குப் போகும்போது புத்தகத்தை எடுத்துக்கொண்டு வராதேடா என்று சொன்னேன், ரசி கேட்கவேயில்லை, நாங்கள் பாதையேயில்லாத காட்டுக்குள்ளே நெடுநேரம் நடந்து, சோர்ந்து, நீரெல்லாம் தீர்ந்தே போனது, புத்தகத்தின் கனத்தைத் தாளமுடியாமல் அவன் எங்களிடம் கேட்டான், நாம் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஆளுக்குக் கொஞ்ச தூரம் புத்தகத்தைச் சுமந்து வருவோமா என்று கெஞ்சிக் கேட்டான், நாங்கள் எல்லோரும் மாட்டோம் என்று சொல்லிவிட்டோம், அப்புறம் நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் - காட்டுக்குள்ளே அந்த இடத்தில் வேர் முண்டுகள் வெளியே தெரிந்த மரம் ஒன்று இருந்தது - புத்தகத்தை அந்த மரத்தடியில் வைத்துவிட்டு திரும்பியே பார்க்காமல் வந்துவிட்டான், புத்தகத்தின் பக்கங்களை காற்று புரட்ட புரட்ட, மரம் வாசித்து, மரத்துக்கு வருகிற பறவைகளுக்கெல்லாம் சொல்லும், பறவைகள் சும்மாயிருக்குமா? எச்சமிடும்போதெல்லாம் எச்சமிடும் இடமெல்லாம் அதைச் சொல்லாதா என்ன? திரும்பத் திரும்பச் சொல்லும்தானே? காடு முழுவதும் அப்புத்தகத்தைப் படித்த பிறகு அந்தக்காடு என்னவாகும்? என்று நான் கேட்டேன், ரசி பாவம், பயந்தே போய்விட்டான், பயந்துகொண்டேதான் வீட்டுக்கு வந்தான்.

December 12, 2009


வண்டி செல்லும் வழியில்தானே நெல்மணிகள் சிந்தும்?

வைத்த முதல் அடியில் வலப்புறம்
நகரும் அடுத்த அடியில் இடப்புறம்
தலையாட்டும் இருபுறம் வாலாட்டும்
ஈயோட்டும்
அடிக்கடி தன் முதுகைப் பாராட்டும்
மாட்டின் குதத்தில் பட்டும் படாமல் காலாட்டும்
ஒரு வட்டம்
ஒரு வழியுள்ள மட்டும் உருளட்டும்
ஊருக்கும் நீரிருக்கும் வேருக்கும்

November 13, 2009


மலர் மலரும் பருவத்தில், நெல்லிக்கனி மனிதரின் குத்தகை நிலத்தில்

சுக்கலாகக் கிழிக்கப்பட்ட காகிதத்துண்டுகள் அந்நிலத்தில் உருண்டும் காற்றில் தாவியும் ஓடிக்கொண்டிருந்தன, அந்நிலத்தில் இருபத்து மூன்று பேர் நின்றுகொண்டு கைகளைக் கோர்த்து ஒரு வளையம் அமைத்துக் காத்திருந்தனர், வளையத்தினுள் இருள் வரும்வரை, அவர்களின் கண்கள் வளையத்தினுள் பார்க்காது, வெளியிலிருந்து வளையத்தினுள் நிகழவிருக்கும் சண்டையைப் பார்த்துக் கொண்டிருக்கும் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தது, ஒரு சில நாட்களில் அந்த இருபத்து மூன்று பேர், இருபத்து நான்கு பேராய் தெரிந்தார்கள், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது எங்க‌ளுக்குத் தெரியாது, உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தரமான சங்கிலியின் கண்ணிகள் போல ஒரே மாதிரியல்லவா இருந்தனர்? பர்மாக்காரனை மட்டுமல்ல-எங்கள் எல்லோரையும் காக்க வைத்து, சண்டை போடும் முன்பே, கொஞ்சம் ஜெயித்துவிட்டான் அர்ஜெண்டினாக்காரன்.

                                §

சொல்லாமல் பொழியுமே
அம்மேகம் நீ
திட்டமிடாமல் களவாடு
கடிகாரத்தை
மலைபோலக் குவித்து வை
உடைக்காமல் குவிக்காதே
தெருவில்
நிறைந்த வெய்யில்
வீட்டுக்குள் எப்படி
எதிருரு நிகழும்படி
நிலைக்கண்ணாடி?
ஒரு வில் உருவில்
எப்படியாவது
வாழ்வைச் சிறைப்பிடி
அலங்கரித்து வை
துணையை அழைக்காதே
பழங்காட்டின் குறுக்கே
நெல்லிக்கனியின் இனிப்பும் இருப்பும்
மனிதருக்கே
அசையாத பாதை
அசையாத பாம்பு
ஆறுமாதமாக
அசையாத இலைக்குப் பின்
அசையாத புலித்தன்மை
எத்தனை விழுக்காடு?
இயற்கையின் வண்ணம் அழியும்
வண்ணம்
முதுகின் பின்
ஆடும்
மாடும்
ஆடும்
ஓடும்
ஆயிரம் மனிதருக்கு
சொல்
மொழி
அடுத்த புல்வெளி

October 20, 2009


"...அந்த ஓவியத்திலிருக்கும் கிணற்றின் ஆழம்

மந்தமாய் நின்றிருக்கும்
                                    ஆட்டைப் பார்த்து நடக்கும்
நாய்—பாவனையாய்.
                                நடுவில் சலசலவென ஓடும்
நீரோடைக்குப் பகல்கரைகள்—எப்போதும்
முற்பகலும் பிற்பகலும்.
                                   இருபுறமும்
மறைந்திருக்கும் மனிதமுகங்கள்—
                                                   நம் முகம்!

                                §

மழைக்காலத்தில் தொலைந்த நகரம்—
நீர்த்த கடலின் நிறம்.
                                குறைநிலவு
ஏறிச் செல்ல படகு இல்லை.
                                            உன் ஈரதூரிகை—
பாலத்தின் கீழிருக்கும் புதுநீரில் மிதந்தாடும்
பாலத்தின் நிழல்!

                                §

அடுக்கி வைத்த ஐந்நூறு—
                                       கண்ணில் விழும்
ஐம்பது அறுபது.
                         பசியுடன் பாரு!
                                                 ஒற்றை ஆப்பிள்
சுவை வேறு!

October 2, 2009


கல்தேர்க்கால்

போர்க்களத்தில் நீ—
எங்கிருந்தாலும் சரி

சந்தேகத்துக்குப் பலியாகிவிடாதே!

ஊர்ந்துகொண்டிருந்தாலும் சரி,
உயிரற்றவன் போல கிடந்தாலும் சரி

நீ சந்தேகத்துக்குப் பலியாகிவிடாதே!

September 7, 2009


பிரபஞ்ச வெடிப்புக்குச் சரிநிகராக

பலூனைப் பற்றி பாடுவதா?
பலூனைப் பற்றி பாடுவதானால்,
பலூனை மட்டும் பாடுவதா?
ஊதிய பலூனின் வாயைக் கட்டும்முன்
தப்பிப்பறக்க
பலூனுக்கு உள்ள வாய்ப்பைப்
பாடவேண்டும்,
வெடிக்கும்படி பலூன் ஊதப்படுவதைப்
பாடவேண்டும்,
அது வெடிக்கும் கணத்தைப்
பிரபஞ்ச வெடிப்புக்குச் சரிநிகராகப்
பாடவேண்டும்,

பலூன் விற்பவன் விடும் கொட்டாவிகளைப்
பாடவேண்டும்,
பலூன் விற்பவன் வைத்திருக்கும்
கைப்பம்ப்பைப்
பாடவேண்டும்,
நீண்ட பலூனில் அவன் செய்யும்
போதாமையின் வடிவங்களைப்
பாடவேண்டும்,
அவனுள் நுழைந்து
அவனுடைய நுரையீரலைப் பற்றி
பாடவேண்டும்,
பலூனை உரசி உரசி அவன் செய்யும்
‘த்த்ட்த்ரீட்த்ச்த்’ச் சத்தத்தை
வாயால் உச்சரிக்க முடியாமையைப்
பாடவேண்டும்,

பலூன் விற்பவனைச் சுற்றி
எத்தனை வண்ணங்களில் பலூன்கள் என்று,
பலூன் விற்பவனைச் சுற்றி வந்து
அவற்றில்
எந்த பலூன் ரொம்பப் பெரியது என்று,
அவற்றில்
எத்தனை சிவப்பு பலூன்கள் என்று,
அவற்றில்
இந்த பலூனைத்தான் வாங்குவேன் என்று
மனதிலே எழுதிக்கொண்டு
வாங்காமல் நகருபவன்
வீட்டுக்குச் செல்லும் வழியை
விவரித்துப்
பாடவேண்டும்,
பலூன் வாங்கியவன் பலூனை
விரல்களால் உரசும் சத்தம்
வேடிக்கை பார்ப்பவனுக்கு
உகந்ததாயில்லை என்பதைப்
பாடவேண்டும்,
அச்சத்தத்தில்,
பலூன் உடைந்துவிடும் அச்சத்தில்,
பலம் குறைந்திருப்பதைப்
பாடவேண்டும்,

காற்றும் விரல்களுமே
பலூனுக்கு நட்பும் துரோகமுமாய்
வாய்த்திருக்கின்றன என்று
பாடவேண்டும்,
மேலே மேலே மேலே
பறக்கும் பலூனில்
லேசான காற்று இருக்கிறது,
ஆமாம், காற்றில் லேசான காற்று
ஒன்று இருக்கிறது என்று
பாடவேண்டும்,
வாயில் வைத்து ஊதி ஊதி,
பெரிதாக ஊதி,
பெரிதான பலூனில்
கனமான கரியமிலவாயு நிறைந்திருப்பதைப்
பாடவேண்டும்,
காற்று நிரம்புவதால் பலூனுக்கு
வடிவம் கிடைக்கிறது என்று
பாடவேண்டும்,
பலூனில் நிரம்பிய காற்று
பலூனின் வடிவம் பெறுகிறது என்று
பாடவேண்டும்

August 13, 2009


இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது

என் காதல் கவிதை இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கும்போது, கவிதை பற்றி பேசவேண்டி வந்துவிட்டது. ”நிறைவேறாத ஆசைதான் கலையைத் தூண்டிவிடுகிறது” என்றான் டோனி. நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். வட்டமான சிறிய மேசைக்கு வெண்ணிற மேசைவிரிப்பு, அதற்கு மேலே மஞ்சள் ஒளி விளக்கு! விளக்கைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம் என்று சொல்லலாமோ? "தச்சன் ஏன் மந்திரவாளை பூக்களுக்கிடையில் மறைத்து வைத்தான், குட்டி இளவரசிக்கென செய்த கட்டிலில்?" என்று கேட்டான் அபி. அந்த மஞ்சள் விளக்கு, ஒரே சமயத்தில் எங்கள் நால்வரையும் பார்த்துக்கொண்டு இருந்தது போலிருந்தது. ”நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் நடுவில்தான் கலை தத்தளிக்கின்றது” என்று டோனி திரும்பச் சொன்னான். ”நிறைவேறாத ஆசை கொண்டவர்கள் பேயாக அல்லவா அலைவார்கள்?” என்று சொல்லி முடித்தான் கே.வி.எ.

August 2, 2009


காதுமடலோரம் காற்றும் ஓசையும்

மாலையின் கிழக்குக் கடற்கரையில் ஈரமணலும்
உலர்ந்த மணலும் கிடக்கிறது, வீடுகளுக்கு
எடுத்துச்சென்றது போக எஞ்சிய சிப்பிகளோடு,

சாய்ந்து கொண்டிருக்கிற செஞ்சாந்து ஞாயிறுக்கு
நீ முதுகுகாட்டி அமர்ந்திருக்கிறாய், ஈரமணலின்
வண்ணத்தில் நீ கால்சராய் அணிந்திருக்கிறாய்,

வானும் கடலும் நீலமிழந்து கொண்டிருக்கின்றன,
உன்னருகில் ஒருவரும் இல்லை, அலைகள்
எழுந்து முன்வளைந்து உடைந்து வெளுக்கின்றன,

நீ எழுந்து சற்று நடந்து வேறிடத்தில் அமர்கிறாய்,
நீ குளிரை உள்சுவாசிக்கிறாய், காற்றிலிருந்த
உப்பு, உன் காதுமடலில் படிகிறது,

கடல்-தொடும்-வானத்தில் ஒரு கப்பல் வரப்போகும்
இரவுக்குள் நீந்த ஆயத்தமாகிறது, வலையுடன்
கட்டுமரங்கள் கடலுக்குள் நுழைகின்றன,

உதடுகள் வறண்டிருக்கின்றன, வெற்றுக்கண்ணில்
தெரிகிறது வானின் ஆழம், உயிருடன் மீன்களை
எடைநிறுக்கும் தெருவில் நீ நடந்து செல்கிறாய்.

July 12, 2009


புலன்கள் எரிந்து அணையும் ஒப்பனையறையில்

1

திசைகளை எல்லாம் அழித்துவிட்டு
இந்தச் சுவர்கள் நெருங்கி வருகின்றன,
இருளைச் சுரந்துகொண்டிருக்கிறது அறை,

முதிர்சிலந்தியின் வலையைப் போல
நான் அசைந்து கொண்டிருக்கிறேன்
நிலவொளி நுழையாத இந்த அறையில்,

நகர இயலாத பாறையின் மீதேறித்
தவழும் நீரைப் போன்ற இசை
கேட்டுக்கொண்டே இருக்கிறது அறைக்குள்


2

ஆமாம், ஆமாம், இந்த அன்பு எல்லை கடந்தது,
ஆமாம், ப‌லனில்லை! ஒரு புர‌ட்சிவீர‌னாவ‌தென
முடிவெடுக்கும்போதே நான் தோற்றுப்போனதை உணர்கிறேன்,

நான் வேட்கையின் மீதேறிப் ப‌ய‌ணிக்கிறேன்,
துதிக்கையின் வ‌ழி யானையின் மீதேறிவிடுகிறேன்,
என் கைக‌ள் தளராமல் முரட்டுப்ப‌ணியைச் செய்கின்றன,

என் மூச்சின் ஒவ்வொரு இடைவெளியும் என் காலடியும்
ஒரு ஒப்பனையழிந்த விலங்கினை நினைவூட்டுகிறது,
நான் சுயசரிதையை எழுதுவதிலும் தோற்றுப்போகிறேன்


3

பாதங்கள் ஆட ஆட,
நிலம் உருமாறிக் கொண்டிருக்கிறது,
நீர்க்குடுவை மூச்சுக்காற்றில் உலர்ந்துபோகின்றது!

’இறக்கும் வரை இது என் உடல்’!
இதற்குத் திறவுகோல் வேறில்லை,
இது மர்மக் குகையுமில்லை!

உடலை மலரச்செய்யும் நடனம்
நடுநிசியைக் கடந்துவிட்டது, உடல்கள், உடல்கள்,
எங்கும் முகங்களை இழந்துவிட்ட உடல்கள்!

June 20, 2009


P.ன் வாத்துகள்

P. சொன்னான்: என் மனைவியும் என் மகனும் மதிய வெய்யிலில் நடப்பதை வரைந்து கொண்டிருந்தேன், மதியத்தின் அனல்காற்று அவளுடைய உடையில் அலைகளை உண்டாக்கிச் சென்றது, மனைவியின் முகத்திலோ மகனின் முகத்திலோ எந்தவித அவசரமும் தெரியவில்லை, வெய்யில் தரும் கருப்பு நிழல்களை அவர்களின் முகத்தில் காணோம், அவர்கள் பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தார்கள், அப்போது காற்றின் ஓசை எனக்குக் கேட்டுவிட்டது, மிக மெல்லியதாக இருந்தாலும் அந்த ஓசை ஓவியத்தில் புகுந்துவிட்டது, என்னைச் சுற்றியிருந்த ஓசைகளின்மீது வெய்யில் பட்டு வேறுவிதமாய் கேட்டது, ஓசைகளுக்கிடையே வெய்யில் நிரம்பி ஓசையின்மையின் வண்ணமாகியது, ஓவியத்தில் வண்ணங்களைக் கொட்டிவிட்டு, அதன்மீது இரு வாத்துகள் ’க்வாக் க்வாக்’ சொல்லி நடப்பதை வரைந்தேன்.

June 1, 2009


நீ பாடத் தொடங்கு

காத்திருத்தலை அறியாத இதயம் வேகமாகத் துடிக்கிறது,
எழுதப்படுவதற்கு முன்பிருக்கும் கவிதை போல
நீ உள்ளே வீற்றிருக்கிறாய்

எத்தனைப் பெரிதான குரல் கொண்டு உன்னை அழைப்பது?
வாசல் தட்டப்படுவதை தடையெனக் கொள்ளாமல்
நீ பாடத் தொடங்கு

May 20, 2009


பிளாஸ்திரி தயாரிக்கும் கம்பெனிகள்

எத்தனையோ பேர் காயமடைகிறார் தினம்தினம்,
எத்தனை நீளமான காயங்கள்,
எத்தனை அகலமான காயங்கள்,
வெளித்தெரியாத ஆழங்கள்!

எத்தனையோ பேர் காயமடைகிறார் தினம்தினம்,
காயம் படும்போது கையில் பிளாஸ்திரி
வைத்திருப்பவர் எத்தனை பேர் என்பதறியாமல்
பிளாஸ்திரிகள் செய்தால் தொழிலுக்குத்தான் காயம்!

தினம்தினம் காயம்பெறும் எத்தனையோ பேருக்கு
பிளாஸ்திரி தயாரிப்பது கடினமானதே,
தினம்தினம் பிளாஸ்திரி தயாரிப்பது
எந்தவொரு தொழிலையும் போல கடினமானதே!

April 28, 2009


நிழலின் விளிம்புக்கு வெளியே நிலவொளி

ஒரு நாள் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள், அப்போது, எரிந்துகொண்டிருக்கும் ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்டி, ’இவை எதுவுமே உண்மை இல்லையா?’ என்று கேட்பார்கள், அவர்களுக்கு என்னிடமிருக்கும் ஒரு முழுநிலவின் படத்தைக் காட்டுவேன், உண்மையில் அது முழுநிலவல்ல, பௌர்ணமிக்குப்பின் ஒருநாள் தேய்ந்த நிலா, இல்லை, அது பௌர்ணமிக்கு முந்திய தினத்து நிலவு, அப்படித்தான் அவர்கள் ஏமாந்தார்கள், முதலில். அவர்களிடம் எரியும் நெருப்பைக் காட்டி, ‘அங்கே வெற்றுக் காகிதங்களும் எரிகின்றன, அவை மரங்கள் வீழ்ந்ததன் ஆவணம்’ என்பேன்.

April 13, 2009


ஓவியம் விற்பவனும் முற்பகலும்

அவனது உடல் சென்ற முறைக்கு இப்போது மெலிந்திருந்தது, நான் உள்ளங்கையை மடக்கி, காற்றை வெளியேற்றி, இறுக மூடிக்கொண்டேன், அவன் தலைக்குப் பதிலாக, நெற்றியில் குட்டினேன், அப்படியே அவனது புறங்கை விரல் எலும்புகளின் மீதும் குட்டினேன், அடுத்து அவன் தலையில் குட்டினேன், நெற்றி-புறங்கை-தலை என்ற வரிசையை மாற்றிக்கொண்டே இருந்தேன், அவனும் பதிலுக்கு அடித்தான், என் கன்னத்தில் அறைந்தான், சில அடிகள் என் தோள்பட்டையில் விழுந்தன, பத்துப்பதினைந்து குட்டுகளில் அவன் முகத்தில் வலியின் நிறமேறியது, மேலும் சில குட்டுகளைப் பெற்றுக்கொண்டு அவன் வேறுவழியில் சென்றுவிட்டான்.

March 30, 2009


வானவில்லுக்கு ஒத்திகை இல்லை

சீருடையை மறுத்த உருவங்கள்
சித்திரங்களாவது எப்படி? கடலிடம் நிறமிழந்த
வெண்மணல், கடலின் அருகிலே கிடக்கிறது

நடுக்கடல் இரவில் கப்பலை மோதும்
சிற்றலைச் சத்தம், கப்பலைச் சேரும்
செய்தியை நனைத்துக் கப்பலை நிரப்பும்

ஆழ உறங்குபவரைப் பாடு,
அருகில் விழித்திருப்பவரைப் பாடு,
அம்புகள் இருளில் நுழைந்து இருளாகிப் பாயும்

இருளுக்குள் புகை ஊடுருவும் வரை
புகையைத் தொடர்கிறது நெருப்பின் வெளிச்சம்,
நா மட்டுமே கொண்டது, தீ என்றுமே புதியது

உறக்கத்தினுள் இயக்கம்தானா கனவு?!
ஒருகணம் நிற்கும் கடிகாரம் என்ன கனவு காண்கிறது?
இது எல்லையற்ற நாடு, நீ எங்கு செல்லவேண்டும்?

திண்ணையற்ற ஊரை காகம் கொத்திச் செல்கிறது,
காத்திருக்கும் தூண்டிலில் பசித்த மீன் விழுகிறது,
புழு மண்ணையே தின்கிறது, மண்ணையே கழிகிறது

ஆறு வளைந்து வளைந்து செல்கிறது,
பாதை ஏன் வளைந்து வளைந்து செல்கிறது?
வானம் நீலமாகிக் கடல் நீலமாகிறது

March 20, 2009


மெதுவாக மாறு

மெதுவாக மாறினால்
எளிதாக இருக்கும்
உனக்கும் அனைவருக்கும்

திடீர் மாற்றம்
கலக்கத்தைத் தரும்
உனக்கும் அனைவருக்கும்

மெதுவாக மாறினால்
ஒருவருக்கும் தெரியாது
கலக்கமில்லை உனக்கும்

March 8, 2009


நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வின்மீது பூனை எதிர்த்திசையில் நடக்கிறது

யார் தொடங்குவாரோ தெரியாது -
இவ்வூரில் பூனைகளும் நாய்களும் சண்டையிடும்,
எந்த நாய் தொடங்குமோ தெரியாது -
இவ்வூரில் நாய்கள் தமக்குள்ளே சண்டையிடும்,
பூனைகளில்லாத அவ்வூரில்
நாய்கள் மனிதரிடம் சண்டையிடும்

February 22, 2009


"அணி செய்வதே கவிதையின் பணி"

(அணிபவருக்கும் அடிபணியாதவருக்கும்)

பேச்சு-உணர்ச்சி-வேகம்-
மேடை-மௌனம்-தோல்வி-
காட்சி-கனவு-அழகு-
உருவம்-முதல்-உடை-
கவிதை-கருத்து-குரங்கு-
வாழ்த்து-கடவுள்-தேசம்-
பக்தி-உத்தி-ஊதுபத்தி

February 7, 2009


சூரியன் உச்சந்தலையைத் தாண்டிப் பச்சைக்குதிரை ஆடும்

ஓட்டுவீட்டுத் தொடரின்
பி்ன்னால்
ஒட்டிக்கொண்டு, ஓடிச் சென்று,
பள்ளி மைதானத்தின் ஓரமாய்
ஓர் ஏரியாகிறது சாக்கடை

நோட்டுகளின் வெண்மையில்
இணைந்து பாயும் கோடுகள்-அவை
நீலமென்கோடுகள்,
உள் அடங்காமல் மீறுகின்றன
சிறிய பென்சில் கோடுகள்

எல்லாத்திசையிலும் தொடுவானம்,
எத்திசையும் ரயில்சத்தம் அறியாதே!
தண்டவாளம் எப்போது துண்டானது?
”டண்ங்”
எங்கிருந்து நேரம்சொல்ல வந்தது?

யாருமற்ற மைதானத்தை
ஒரு வாத்துக்கூட்டம் சுற்றுகிறது,
ஒரு வாத்து நடை தவறி
விழுகிறது,
எழுகிறது, கூட்டமே பறக்கிறது

January 24, 2009


ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுபத்தைந்தில் ஓர் ஆனைமுகன்

(கூத்தன்சாமிக்கு)

தினசரி நடப்பதல்ல ஆணி அடிப்பது,
”சின்னஆணி என்பதால், பார்த்துஅடி”, ஆணி
அடிக்கும்போதே ஆட ஆரம்பித்து, எதிர்சுவரில்
இடம்பிடித்தார் எங்கள் வீட்டுப் பிள்ளையார்