November 13, 2009


மலர் மலரும் பருவத்தில், நெல்லிக்கனி மனிதரின் குத்தகை நிலத்தில்

சுக்கலாகக் கிழிக்கப்பட்ட காகிதத்துண்டுகள் அந்நிலத்தில் உருண்டும் காற்றில் தாவியும் ஓடிக்கொண்டிருந்தன, அந்நிலத்தில் இருபத்து மூன்று பேர் நின்றுகொண்டு கைகளைக் கோர்த்து ஒரு வளையம் அமைத்துக் காத்திருந்தனர், வளையத்தினுள் இருள் வரும்வரை, அவர்களின் கண்கள் வளையத்தினுள் பார்க்காது, வெளியிலிருந்து வளையத்தினுள் நிகழவிருக்கும் சண்டையைப் பார்த்துக் கொண்டிருக்கும் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தது, ஒரு சில நாட்களில் அந்த இருபத்து மூன்று பேர், இருபத்து நான்கு பேராய் தெரிந்தார்கள், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது எங்க‌ளுக்குத் தெரியாது, உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தரமான சங்கிலியின் கண்ணிகள் போல ஒரே மாதிரியல்லவா இருந்தனர்? பர்மாக்காரனை மட்டுமல்ல-எங்கள் எல்லோரையும் காக்க வைத்து, சண்டை போடும் முன்பே, கொஞ்சம் ஜெயித்துவிட்டான் அர்ஜெண்டினாக்காரன்.

                                §

சொல்லாமல் பொழியுமே
அம்மேகம் நீ
திட்டமிடாமல் களவாடு
கடிகாரத்தை
மலைபோலக் குவித்து வை
உடைக்காமல் குவிக்காதே
தெருவில்
நிறைந்த வெய்யில்
வீட்டுக்குள் எப்படி
எதிருரு நிகழும்படி
நிலைக்கண்ணாடி?
ஒரு வில் உருவில்
எப்படியாவது
வாழ்வைச் சிறைப்பிடி
அலங்கரித்து வை
துணையை அழைக்காதே
பழங்காட்டின் குறுக்கே
நெல்லிக்கனியின் இனிப்பும் இருப்பும்
மனிதருக்கே
அசையாத பாதை
அசையாத பாம்பு
ஆறுமாதமாக
அசையாத இலைக்குப் பின்
அசையாத புலித்தன்மை
எத்தனை விழுக்காடு?
இயற்கையின் வண்ணம் அழியும்
வண்ணம்
முதுகின் பின்
ஆடும்
மாடும்
ஆடும்
ஓடும்
ஆயிரம் மனிதருக்கு
சொல்
மொழி
அடுத்த புல்வெளி

No comments: