பாநிரும்மஞ் சிடாரெட்டு சொகாது வட்டோமித்து
வய்யாமுன் ஏதிகரெப்பி மேரளை வைறவற்போ
நசிர்மே ஒய்சீவு பொப்பீசரி பல்லக்கணை-தோ
இயனாயயோயி தமனான் தயோடே
புதித்து அகுதிஅகுதி காடியாத்திட ம்முமே
முங்கள் பனைகல் நவானைபல கலவ்வே
December 8, 2011
தெளிமதிமாயும் நகுவரினீறில்
November 17, 2011
October 30, 2011
ஆளுயரம்
கடல் ஏரிக்கென்று இருக்கும் எதிர்பாராத ஆழம், பயம்
துடைத்த நீர்ச்செவ்வகத்தில் கருப்புவரி மீன் நீந்துகிறது
தொட இயலாமல், பொழுதாக, நா உமிழ்நீர் சொரியும்
தெருநாயின் பகலை சுவீகரித்துக் கொள்வது சரியாகும்
புலனைத்தாண்டி எரிகிற நேரம் விரயத்தீ, ஏலவிடுதியில்
மிதமாக ஒலிக்கிறது ’இருந்துமில்லாத நடைபாதைச்சொற்கள்’
மல்லாந்த உணவுமேசையும் அதன் உடைந்த கால்களும், அடுத்து
ஒருத்தியின் முலாம் உரிந்த ஆடையலமாரிக்கதவுக்குமிழ்
கல்லும் மண்ணும் இருளும் கலந்து பிசைந்த மாநிலம்.
பிறவாத வானவில்லை அழித்துக் கலைந்த கருந்திரள்
இரவில் காற்றோடு கூடி கவிந்த மழைக்கூத்தைப் பார்
நெளிந்து நிலத்துளையேறி வரும் மண்புழுக்களைப் பார்
புள்ளியில் துவங்கிய சாலையில் ஐந்துமுனை நட்சத்திரம்
குறி, தலைநகரம். நம்முடைய ஒப்புதலாய் வேடந்தாங்கல்
கிளைகளில் வேறு விடுதலையறியாமல் தூரப்பறவைகள்
இடும் ஆயிரம் முட்டைகளில் விரிசலென மின்னலின் நீளம்
September 9, 2011
கானமயிலாகுபெயர்
மூடிய மெல்லிமை
கடைசியாக-ஆரஞ்ச்சிவப்பு-
நினை
வானவில் ஓரம்
கண்மூடி வெளித்தீ
யுணரமுடியும்-
அனல்
தவழ்கிறது உடல் பிறந்து
August 28, 2011
முடிவில்லாமல் அழகென்று பேச
தின்று பருக்காத குழந்தை
சும்மாயிருந்தும்
முனைவரை ஏன்
கூட்டிப்போகணும் சோப்புக்கிண்ணம் வாங்க?
ஆணித்தரமாய் அல்ல
உடைந்த வெண்பூசணிப்பாளம் போல, அப்படியே நின்றும்
அழுதும் பார்த்தும் சந்தேகத்தோடு கண்துடைத்து
எது அழகென்று பேச
கோணிச்சுளிக்காமல் முதலில்
திரும்பிய அம்முகம்—மைசூர் சந்தன சோப்பு இதோ!
பத்துமணிநேர வீட்டுக்குள்
எட்டிப்பார்க்கும் தலையாக
குட்டி ஆமை சிரித்தவாயாக அமர்ந்திருந்தது—பாதிக்கும்
கீழே
நீருள்ள வாளியில்
நீர்ச்சொட்டு
அலைகளாய்
அதே சிரிப்பு
எங்கோ செய்த அச்சில்
உள்வாங்கிக் குழிந்த ஆமை முதுகில் நம் ஓருலகை
மணக்க வைக்கும் சோப்பு, சுத்தமாய் ஒரு நாள்
கரைந்ததால்
எல்லோரும் தூங்கியெழுந்ததால்
புதியது
August 17, 2011
ஒரேயொருவனை
பல்வலி
அறிந்த அவனை
சொல்வலி
அறிந்த அவனை
கால்வலி
அறிந்த அவனை
எதிர்பாராத கணத்தில்
தொங்குமீசை
வைத்திருக்கும் அவனை
இன்று, வெள்ளிக்கிழமை?
எல்லாத்திசையிலும் படகுகள்
கொடிகட்டிச் சென்றுகொண்டிருக்கும்
சட்டை அணிந்தவனை
அவனையறியாமல்
கொன்றுவிடவேண்டும்
இன்று
அவன் சென்ற வழியை
வேறு யாரும் அறிந்துவிடாமல்
அழித்துவிடவேண்டும்
August 4, 2011
கதவுக்குறிப்பு
எத்தனையோ
வண்ணக் கதவுகள்!
ஒரு கதவு, முழுவதும்
மூடியிருந்தாலும்
முழுவதும் திறந்திருந்தாலும்
புல்லின் அமைதி தரும் நிறைவு!
July 23, 2011
பிள்ளைகளுக்குப் பிறகு
அக்கினி வெயில் போன மாதம் முடிந்துவிட்டது
நீதிமன்ற வாசலில் வேப்பமரத்தின் சிறிய நி்ழல்
பிள்ளைகள் அங்கே விளையாடிக்கொண்டிருந்தார்கள்
பிறகு நீயும் அங்கே களைப்பாறிக்கொண்டிருந்தாய்
July 16, 2011
வயலில் நிற்கும் கரும்பாறை
அவ்வழியில் யாரும் இல்லை அந்நேரத்தில், நீர் நிறைந்திருந்த வயலுக்குள்ளே பெரிய கரும்பாறை நின்றிருந்தது வழிதப்பிய யானை போல, கையில் நாம் கேமரா வைத்திருக்கவில்லை ஆதலால், நாம் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை, மலை ஏறுவதற்கு முன், அத்தகைய புகைப்படத்தில் நம் முனைப்புகள், எழுச்சிகள், துரிதங்கள் எல்லாம் நம் முகமலர்ச்சியுடன் சேர்ந்து நம் நம்பிக்கையாய் படிந்து நமக்கு நன்னம்பிக்கை தரும் எப்போதும்
நம்பிக்கையே இல்லாமல், ஆனால், மலைமுகடுவரையுமே வேகமாக ஏறி வந்துவிட்டோம், எதுவுமே தெரியவில்லை, மேலே வானமும் தெரியவில்லை, கீழே பூமியும் தெரியவில்லை, இந்த முகட்டுக்குத்தான் புகைமுகடு என்று பெயர், விறுவிறுவென ஏறி வந்த காரணத்தால் தளர்ந்து கனன்றுகொண்டிருந்த உடல், எச்சிந்தனைகளையும் எழவிடாமல் துடைத்துக்கொண்டேயிருந்தது, நாம் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தாலும் பார்வையை வெகுவாகக் குறைத்து நம்மைச் சுற்றி சூழ்ந்துகொண்டிருந்தது புகை
July 15, 2011
July 8, 2011
வாய்ப்புண்
கீழுதடும் மேலுதடும் சேருமிடத்தில்
சிறிய கோடு கிழித்தது போல, பிளந்து
வலிக்கிறது, வாய் திறந்து உண்ணவும்
வாய் திறந்து சிரிக்கவும் முடியவில்லை
விட்டமின்தான் பற்றாக்குறை, பிரச்சினை
குடலில் இருந்தால், உடம்பிலே சேராது
சற்குரு தாத்தாவும் அப்படித்தான் சொன்னார்
குணமாக ஒரே ஒரு பச்சிலை தந்தார்
June 23, 2011
June 4, 2011
நூல்நுனி
அணைந்துவிடாமல் எரிகிற தீ... சிங்காரிப்பவளின் சீப்பிலிருந்து உருவி எடுத்து மேசைக்கண்ணாடியினடியில் சேகரிக்கும் கேசத்திரளாக காற்றில் அடர்கிறது தீயின் எச்சம், நாள்தோறும், புதுஅடுக்காக இரவுகளில் சாலையில் வேய்ந்து படிகிறது, இராட்சத சிலந்தியின் வலைப்பின்னலான மாநகரச்சாலைகளின் இடைவெளிகளில் இருப்பிடம் கட்டி வசித்துவருகிறார்கள் மனிதர்கள், முதல் சிட்டுக்குருவி சன்ஷேட் மீது வந்து குதிக்கிறது, கூவுகிறது, கூடச்சேர்ந்து குதிக்கவும் கூவவும் வாவாவென்கிறது, இரவெல்லாம் அடைத்திருக்கும் ஜன்னலின் இடுக்குவழி பார்க்கத் துடித்து முதிரத்துவங்குகிறது அதிகாலையொளி, பத்துக்கு-பதினொன்று படுக்கையறையில் விழித்திருக்கும் முதியவர் எழுந்து புறப்படுகிறார், சிலநாட்களிலே பரிச்சயமாகிவிட்டது காவல்காரனின் கவலை தோயாத எண்ணெய் வழியும் முகம், முதியவரின் வெளிர்ரோஸ் அரைக்கைச் சட்டையில் காலர் பொத்தானும் கடைசிப் பொத்தானும் தளர்ந்து நூல்பிரிந்து தொங்க, இரும்பு க்ரில் கேட்டை அவரே திறக்கிறார், கல்லெறிபட்ட நாயின் ’பளிச்’ ஓலம் போன்ற கேட்டின் நாராச சத்தம், அதனைப் பொருட்படுத்தாமல் கொண்டியிட்டு மூடி, பின்புறத்தசை கரைந்து தேய்ந்திருக்கும் இடுப்பை முன்னகர்த்திச் செல்கிறார், வெல்கம் நியூஸ் ஸ்டாண்ட் அருகில் சென்றதும் ’இன்றைக்கு வேண்டாமே’ என்று பால்பாக்கெட் வாங்காமல் கடந்துபோகிறார், தொலைவிலிருந்து இன்னும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறான் காவல்காரன், யாரோ பார்க்கிறாற்போலிருக்கும் உணர்வெல்லாம் எப்போதோ மழுங்கிவிட்டது, அவர் ஸ்ரீ சத்யா ஹார்டுவேர்ஸ் வரை ஒரு நடை போய் திரும்பி வருகிறார்
May 20, 2011
போதுமான காரண காரியங்கள்
நான்கு பக்க விளிம்புகளில் தடவி
படிவத்தில் ஒட்டிய நகையில்லாத புகைப்படம்
பார்த்திருந்தபோது மெய்மறந்த நொடிகளில்
பசைவிரல் துடைத்த சுவராய்
பிசுபிசுக்கும் கீழ் தளம்,
அறை சிறிதானது, உள் நுழைந்ததும்
ரொம்ப மோசமில்லை,
எங்கெல்லாமோ சுற்றி, மிக்க தேடலுக்குப்பின்
ஒருவழியாக முடிவெடுத்து
வாங்கிய மரூன் சோபாவில் தலைசாய்த்து
கூரையில் பார்வை நிலைத்தது,
மேல் குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களை
தாங்கிநிற்கும் கூரையின் பொறுப்பை நினைத்து
தினசரிகளைக் கலைக்காமல்
அடுக்கியதன் அருகே
பொதுவாக அணைத்தே
இருக்கும் தொலைக்காட்சியில்
தூசுப்படலம் தாண்டி, அசையாமல், கறுப்புப்பிரதியாக
அறையைக் குறுக்குவாக்கில்
பெரியதும் சிறியதுமாக பிரித்த சோபாவில்
கூரையிலிருந்து விழுந்த பல்லியாய்
May 10, 2011
கூர்
நம் உள்ளம் உள்ளங்கையளவே மலரும், அவ்வளவே வளர்ந்த உருவம்,
அரிசிமண்டியின் முன் இரண்டு கால்களில் எக்கி நின்ற சுண்டெலி
நுகரும் உரிமையில் நீண்ட வாழ்வில் கூனேறிய அரிசிக்கடைக்காரரிடம்
சத்தமாகக் கேட்டது ‘பச்சரிசி பழையதாக வேண்டும் ஒரு கிலோ’
80 வயதுக்கனிவுடன் இருக்கைப்பள்ளத்திலிருந்து எழுந்தார், 'எவ்வளவு
தூரம் உன் இல்லம்?’ அவருக்குத் தெரியுமே ஊரின் விஸ்தீரணம்!
நுகர்வோரிடத்து நலம்பேசும் பூ வியாபாரிக்கும் உண்டு ஓர் ஆன்மபலம்,
வழியிலே புதியவனிடம் பேசும் பள்ளிச்சிறுமியின் துடுக்கு எலியிடம் -
’கூடவே ஓடிவரும் ஸ்கூட்டர் இருக்கே என்னிடம்!’, அனுபவத்தில்
நியூட்டன் போல் எடைகளையும் பல விசைகளையும் அறிந்தவர்
பல்சுவை பல்வகை அரிசி மூட்டைகளோடு நின்றிருந்தார், ‘அப்படி இப்படி
கொட்டாமல், அரிசியை மூட்டையென ஸ்கூட்டரில் பிணைத்துத் தருவீரா?
தவறிக் கொட்டினாலோ ஒரு கிலோவில் அரிசிமணிகள் எத்தனையோ,
யாரும் அள்ளமுடியுமோ? அது காக்கைக்கூட்டத்திற்கு மட்டுமே ஆகுமோ?
ஊரெல்லாம் ஓடும் பறக்கும் ஒவ்வோர் உயிருக்கும், ஓர் அரிசி
தந்தாலும், இந்த மண்டியில் ஏதும் குறைந்தது போலத் தெரியாதோ?’
ஆமாம் போலத் தலையாட்டி பக்கத்துமூட்டை அரிசியை அள்ளினார்,
’இந்தாருங்கள் பணம்’ என்று மேல் படிக்கட்டுக்குப் பாய்ந்த சுண்டெலி
வாய் திறந்து காட்டியது ‘ஒற்றை ரூபாய் நாணயம்’, கேள்வி ஒன்று
எழுந்தது சிதறிய அரிசிமணிகளைக் கொறிக்க நினைத்துப் பார்த்ததும்
’அரிசி நல்ல நயமென்றால் கிலோ நாற்பது ரூபாயெனத் தெரியாதோ?’
டிஜிட்டல் தராசில் திறந்துமூடும் சதுரங்கள், சுண்டெலியின் குரல் கனத்தது,
’என் கூட்டம் மிகப்பெரியது, எங்கும் விடமாய் உணவு கிடைக்கிறது,
அரிசிக்கு கொடுக்கும் விலையாலே நலம் பயக்கும் நம் இருவருக்கும்’!
மதிப்பாய் குனிந்து பார்த்தார் கடைக்காரர், புது வாடிக்கையாளன் தானே!
’இன்று அரிசி தருகிறேன், மறக்காது, பிறகு மீதிப்பணத்தைக் கொடுத்திடு’,
வாசலுக்கு வந்த ஸ்கூட்டரில் மூட்டையை இறுக்கம் ஏற்றிக் கட்டினார்,
சுமை தாங்காமல் அச்சு வளைந்ததும் முன்சக்கரம் ஒருபுறம் சாய்ந்தது
வளைதோண்டியின் கூர்முகத்தில் பப்பாளி விதைக்கண்கள் பளபளக்க
’சிறு பையில் கைப்பிடி அரிசி கட்டித்தாருங்கள், விடுவிடுவென
முதுகில் சுமந்து ஓடிச்செல்வேன் வீட்டுக்கு’, பூனைக்கண்ணில் படாமல்
சற்றுதூரமே போனது, யாருக்கும் சிரமமே முதன்முதல் அனுபவம்!
சிற்றெலி தத்தளித்துத்தான் இறந்தது, முன்னெப்போதுமில்லாத அடைமழை
வெறித்த மூன்றாம் நாள், மேகமூட்டம் இன்னும் கலையவில்லை!
நாற்றமெடுத்த கடைத்தெருவில் மூக்கைப் பொத்திக்கொண்ட ஊர்மக்கள்
அரிசிப்பையின் அருகில் செல்லாமல் பலசரக்கு வாங்கிச் சென்றனரே!
April 27, 2011
பகலெறும்புகள்
11 மணிப்பகலில் கலைந்த எறும்புகளாய் தயங்கிச் சென்ற வாகனங்களின் சந்தடியில் நின்றிருந்தேன், கசங்கிய போர்வையில் எழுந்து நிற்கும் அலைகளின் மேடுபள்ளங்களோடு மேகத்தின் நிழல் தோள்மீதும் விழுந்தது, இரண்டாவது போரில் இறந்தவர்களின் கல்லறைத்தோட்டத்தில் சீராக்கப்பட்ட புல்தரையில் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள், இருவருக்கும் ஏறத்தாழ ஒத்த உடலமைப்பு, ஒட்ட வெட்டிய தலைமயிர், அயர்ச்சி நேர்ந்துவிடாதவண்ணம் மந்தகதியில் உயிரோட்டமிருந்தது அவர்களது அசைவுகளில், பார்த்தால் 16, 17 வயதிருக்கும், அந்த வெயிலில் உடலோடு திரண்ட தசைகளைப் பற்றியிருந்த பனியனும் கால்சட்டையும் அவர்களை அலுமினியத்தில் வனைந்தவர்களாகக் காட்டியது, தாவித்தாவி வரிசையாகக் கற்களைத் தொட்டு ’கோ’ சொல்லித் துரத்தியவனை சரியான போக்கில் மானின் மதர்ப்புடன் தாவி அலைக்கழித்தவன் சற்று தலைதிருப்பி பாதிக்கண்ணால் பார்த்தபடி தப்பிச்சென்றான், காய்கள் பறித்து விடுபட்ட தாழ்ந்த கிளையைப் போல காற்றில் அவர்களது உடல்கள் மந்தகாசத்துடன் ஏறி இறங்கின.
February 16, 2011
பழமுதிர்ச்சோலையைக் கடத்தல்
வடக்கிலும் தெற்கிலும் கடந்துசெல்லும்
பழகிப்போன பொதுப்பார்வையில்
இனிமேலும்
அடுக்கிவைத்திருக்கமுடியாத மாம்பழங்கள்
கைகளில் உருட்டிப்பார்க்கப்பட்டு
ஒவ்வொன்றாய் களையப்படுகின்றன,
போர்மூளும் அபாயத்தில்
உள்ளே அருவருப்பு கலந்த துக்கம்
பழமுதிர்ச்சோலையை நீங்கள் கடந்துசெல்லும்போது
போதிய முதிய வீரர்களில்லாத படைத்தளபதிக்கு
நான்கு தலை
வியூகம் அமைக்கமுடியாமல்
குன்றின் மீதேறி
நின்றுகொண்டிருக்கிறானோ அரூபமாய் வெகுநேரமாய்?
தன்போக்கில்
அம்மிக்கற்களை இம்மியும் நகர்த்தாமல்
புழு, பூச்சிகள் வசிக்கும்
எத்தனையோ பாழுங்கோட்டைகள்!
படைத்தளபதியின்றி
எந்தக் கோட்டையைப் பிடிப்பார்கள்
திங்கள்சந்தையை மகிழ்ச்சியாய் சுற்றும் வீரர்கள்?
மாநிலத்தில் அத்தகைய போர்
உங்களுக்குக் காணச் சகியாது!
அவன் தோள்களைக் குறுக்கி
முதுகைக் கூனாக்கியிருக்கிறான்,
நெஞ்சின் குறுக்கே மடித்த கைகளில்
சாற்றுக்கூழ் வழிய
அழுகியபழங்களை அள்ளிக்கொண்டு
பதில் புன்னகை தராமல்
இலாவகமாய் அதிராமல் நடந்துபோகிறான்,
ஈரமும் வெம்மையுமேறிய
(ஈரம் என்றால் உங்களுக்கு கடல் தானே?!
சூடு என்றால் சூரியன் தானே?!)
காற்றுவெளியில்
சற்றையபொழுது
கர்ப்பமாய் நிற்கிறது பழவாசனை
January 26, 2011
January 21, 2011
January 19, 2011
மேலிருந்து கீழே
நான் சைக்கிள் ஓட்டுவதை
மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்,
பொத்தென்று கீழே விழுந்தேன்