April 27, 2011


பகலெறும்புகள்

11 மணிப்பகலில் கலைந்த எறும்புகளாய் தயங்கிச் சென்ற வாகனங்களின் சந்தடியில் நின்றிருந்தேன், கசங்கிய போர்வையில் எழுந்து நிற்கும் அலைகளின் மேடுபள்ளங்களோடு மேகத்தின் நிழல் தோள்மீதும் விழுந்தது, இரண்டாவது போரில் இறந்தவர்களின் கல்லறைத்தோட்டத்தில் சீராக்கப்பட்ட புல்தரையில் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள், இருவருக்கும் ஏறத்தாழ ஒத்த உடலமைப்பு, ஒட்ட வெட்டிய தலைமயிர், அயர்ச்சி நேர்ந்துவிடாதவண்ணம் மந்தகதியில் உயிரோட்டமிருந்தது அவர்களது அசைவுகளில், பார்த்தால் 16, 17 வயதிருக்கும், அந்த வெயிலில் உடலோடு திரண்ட தசைகளைப் பற்றியிருந்த பனியனும் கால்சட்டையும் அவர்களை அலுமினியத்தில் வனைந்தவர்களாகக் காட்டியது, தாவித்தாவி வரிசையாகக் கற்களைத் தொட்டு ’கோ’ சொல்லித் துரத்தியவனை சரியான போக்கில் மானின் மதர்ப்புடன் தாவி அலைக்கழித்தவன் சற்று தலைதிருப்பி பாதிக்கண்ணால் பார்த்தபடி தப்பிச்சென்றான், காய்கள் பறித்து விடுபட்ட தாழ்ந்த கிளையைப் போல காற்றில் அவர்களது உடல்கள் மந்தகாசத்துடன் ஏறி இறங்கின.

No comments: