December 16, 2010


கடைசி மந்திரவாதி

’பூமி என்னும் பாய் மீது, மனம்போக்கில், உடல்கூசாமல் நடந்துதிரியும் பூனைகளை முற்றிலுமாய் அழிக்கமுயன்று கைகூடாதவன்’ தனக்கான கல்லறையைத் தோண்டிக்கொள்ள மறுத்துவிட்டான், அது நியாயமே, ஒத்துக்கொள்ளக்கூடியதே, என்று ஒத்துக்கொண்டார்கள் சிலர்

§

ஒரு தங்க விடியலில் அவன் நீரை அள்ளி மீண்டும் கௌசிக மகாநதியில் வார்த்துக்கொண்டிருந்தபோது அருகாமையில் சென்ற ஒரு கவிஞனிடம் மெல்லிய குரலில், ”தன் மடியிலே தனக்குத் தேவையான எண்ணிக்கையில்தான் மீன்களைக் கொண்டிருக்குமாம் ஆறு”, என்றானாம், முற்றிய முருங்கைக்காயை வெட்டிச் செய்தது போல கணுக்கள் பருத்து இருந்ததாம் அவனது கைவிரல்கள்

§

அவன் கையோடு எடுத்துத்திரிந்த வரலாற்றுப்புத்தகமும் அதனுள் வைத்திருந்த ஆறு 100 ரூபாய்தாள்களும் களவாடப்பட்டு, கருணை கொண்ட சிறுநகரின் ஏரியோரத்திலும் கொல்லிமலைக் காட்டிலும் ஒரு பைத்தியம் போல சுற்றிக்கொண்டிருந்தானாம் மந்திரவாதியாய் மறுபிறவி எடுப்பதற்கு முன்பு, தூக்கமில்லாமல் இரவிலும் பகலிலும் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவனை ஆடெண்ணி என்றே குறித்தார்களாம் சிறுநகர மக்கள், சிறுவர்கள் அவனை ஆடுதின்னி என்றார்களாம்

§

ஒரு காலத்தில் யார் எந்தக் கேள்வி கேட்டாலும் அவன் வாய் திறக்காது, அவன் கண்கள் எல்லாத் திசைகளிலும் சுழலுமாம், எந்தவோர் கேள்விக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட பதில்கள் இருக்குமென தான் நம்பிக்கொண்டிருந்ததைப் பொய்யென்று நிரூபித்த பிறகே தன்னை அவன் மந்திரவாதியென நம்பினானாம்

§

அவன் புளியந்தோப்பிலே உட்கார்ந்துகொண்டு

            என்னை நானே தண்டித்துக்கொள்ள
            எனக்கு உரிமை இல்லையா?

            என்னை நானே ஏமாற்றிக்கொள்வது
            எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

            என்னை நானே தண்டித்துக்கொள்ள
            எனக்கு உரிமை இல்லையா?

            என்னை நானே ஏமாற்றிக்கொள்வது
            எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

என்று உயிரில்லாத முகத்துடன் புலம்பிக்கொண்டிருந்தானாம், தடியோடு ஓடிவந்த காவல்காரன் ’இவன் திருடனில்லை! புளியந்தோப்பிலே நுழைந்துவிட்ட பித்தன்!’ என்று வேறுவழி தெரியாமல் தடியால் ஒருமுறை புளியமரத்தை ஓங்கி அடித்துவிட்டுச் சென்றானாம்

§

அவன் மனிதரையோ பறவைகளையோ காணாத நாட்களில் சாயங்கால வெயிலை நீண்ட கூவலாக்கிக் கேட்டு அலாதி இன்பமடைந்தான்

§