August 13, 2009


இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது

என் காதல் கவிதை இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கும்போது, கவிதை பற்றி பேசவேண்டி வந்துவிட்டது. ”நிறைவேறாத ஆசைதான் கலையைத் தூண்டிவிடுகிறது” என்றான் டோனி. நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். வட்டமான சிறிய மேசைக்கு வெண்ணிற மேசைவிரிப்பு, அதற்கு மேலே மஞ்சள் ஒளி விளக்கு! விளக்கைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம் என்று சொல்லலாமோ? "தச்சன் ஏன் மந்திரவாளை பூக்களுக்கிடையில் மறைத்து வைத்தான், குட்டி இளவரசிக்கென செய்த கட்டிலில்?" என்று கேட்டான் அபி. அந்த மஞ்சள் விளக்கு, ஒரே சமயத்தில் எங்கள் நால்வரையும் பார்த்துக்கொண்டு இருந்தது போலிருந்தது. ”நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் நடுவில்தான் கலை தத்தளிக்கின்றது” என்று டோனி திரும்பச் சொன்னான். ”நிறைவேறாத ஆசை கொண்டவர்கள் பேயாக அல்லவா அலைவார்கள்?” என்று சொல்லி முடித்தான் கே.வி.எ.

August 2, 2009


காதுமடலோரம் காற்றும் ஓசையும்

மாலையின் கிழக்குக் கடற்கரையில் ஈரமணலும்
உலர்ந்த மணலும் கிடக்கிறது, வீடுகளுக்கு
எடுத்துச்சென்றது போக எஞ்சிய சிப்பிகளோடு,

சாய்ந்து கொண்டிருக்கிற செஞ்சாந்து ஞாயிறுக்கு
நீ முதுகுகாட்டி அமர்ந்திருக்கிறாய், ஈரமணலின்
வண்ணத்தில் நீ கால்சராய் அணிந்திருக்கிறாய்,

வானும் கடலும் நீலமிழந்து கொண்டிருக்கின்றன,
உன்னருகில் ஒருவரும் இல்லை, அலைகள்
எழுந்து முன்வளைந்து உடைந்து வெளுக்கின்றன,

நீ எழுந்து சற்று நடந்து வேறிடத்தில் அமர்கிறாய்,
நீ குளிரை உள்சுவாசிக்கிறாய், காற்றிலிருந்த
உப்பு, உன் காதுமடலில் படிகிறது,

கடல்-தொடும்-வானத்தில் ஒரு கப்பல் வரப்போகும்
இரவுக்குள் நீந்த ஆயத்தமாகிறது, வலையுடன்
கட்டுமரங்கள் கடலுக்குள் நுழைகின்றன,

உதடுகள் வறண்டிருக்கின்றன, வெற்றுக்கண்ணில்
தெரிகிறது வானின் ஆழம், உயிருடன் மீன்களை
எடைநிறுக்கும் தெருவில் நீ நடந்து செல்கிறாய்.