October 19, 2008


ஒளிந்துகொள்ள ஆயத்தமாகும்போது

எந்த உடை அணிந்துகொள்வதென மெனக்கெடாதே,
உன்னுடைய அனைத்து உடைகளும்
உன்னுடைய நிறமேறி இருக்கின்றன,
உன் உடைதான் உன்னுடைய அடையாளம்,

நீ ஒரு சிங்கத்தோடு வசிக்க வேண்டும்
என்னும் விருப்பம் கொண்டிருந்தாய்,
உனக்கான குகையின் பங்கை சிங்கத்திடமிருந்து
எப்படியும் பெற்றுவிடுவாய் எனச் சொன்னாய்,

சிங்கம் நன்னடத்தைகளைக் கொண்டது
என்னும் நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது,
உன் எண்ணங்கள் சிறந்த நோக்கங்களையே கொண்டிருக்கின்றன,
ஆனால், விளையாட்டாகவே நீ அதைச் சொன்னாய்,

உனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கிறது:
வாசலைத் தாண்டியதும் கண்ணுக்கெட்டும் தூரத்தில்
பூக்கள் தென்படுமா? நீ கற்ற எண்களின் இடமதிப்புகள்
பூக்களை எண்ணிக்கையிடப் போதுமானதா?

இடையே கரும்பூக்களைக் கண்டால்
என்ன செய்வதென வருத்தம் கொண்டிருக்கிறாய்,
பூக்களை விட, நாளின் எத்தனை தருணங்களில்
நீ மகிழ்வாக இருக்கிறாய் என்பதுதானே உனக்கு முக்கியமானது?!

October 2, 2008


பூமியின் பறவைகள்

நீ ஒவ்வொரு செடியாய் தாவித் தானியம் உண்கிறாய்,
எங்கள் உலோகச் சிறகுகள் மேலும் கீழும் அசையாது,
பரந்துபட்ட கோணங்களில் பறக்கவே நாங்கள்
ஆசை கொண்டோம், நாங்கள் பூமியைத் தாண்டிவிட்டோம்

சிறகு என்பதற்குச் சுதந்திரம்
என்று பொருள் கொண்டனர், எங்களில் பாதிப்பேர்,
எப்போது தெரியுமா? சிறகுகளுடன்
தேவதைகள் காட்சி தந்தபோது

காதுகளை விசிறியபடி இருக்கும் யானைகளுக்குப்
பறக்கச் சொல்லிக் கொடுத்து
பலத்த காயங்களை யானைகளுக்குத் தந்து
தாங்களும் பெற்றனர் எங்களில் சிலர்

எங்களின் பரந்துபட்ட பார்வையால்
எங்களுக்கு வேண்டியனவற்றை அதிகரித்தும்
எங்களுக்கு வேண்டாதனவற்றை அழித்தும்
சிறகு என்பதற்கு ஆற்றல் என்றொரு பொருள் அறிந்தோம்

வேற்றுகிரகத்தில் எங்களைச் சந்திக்க நேர்பவர்கள்
அறியாமையாலோ பட்டப்பெயராகவோ
எங்களை 'பூமியின் பறவைகள்' என்று அழைத்தால்
நீ வருத்தம் கொள்ளாதே, பறவையே!

உன் நளினமான பறத்தலைக் கண்டு, எங்களில் சிலர்,
உன் மென்மையான சிறகுகளையே விரும்புகின்றனர்,
தற்காக்கும் முயற்சிகளுக்கும் தண்ணீரைத் தேடவும்
அவர்களுக்கும் வளரட்டுமே உன்னைப் போன்ற சிறகுகள்!