July 22, 2008


நட்சத்திரம் எப்படி உருவாகிறது?

நமக்கு சூரியனைத்தானே நன்றாகத் தெரியும், ஆதலால்,
சூரியனை வைத்துத்தான் நட்சத்திரத்தைப் பற்றி சொல்லமுடியும்;
சூரியன் எப்படித் தோன்றியதோ, அப்படித்தான் நட்சத்திரமும் தோன்றியது

தன்னுடைய நிறத்திலிருந்து எடுத்த நீலத்தை,
தன்னுடைய நிறத்திலிருந்து மாறுபட்ட பின்புலமாக விரித்து,
(அந்தப் போர்வைக்கு வெளியில்தான் நட்சத்திரங்கள் இருக்கின்றன!)
ஒப்பற்ற முறையில் ஊர்ந்து வருகிறான், சூரியன்!
அந்தக் கலைநிகழ்வை உங்களால் காணமுடிகிறதா, இல்லையா?

சூரியன் நம் மீது மட்டுமல்ல, தாவர விலங்குகளிடமும்
ஆதிக்கம் செலுத்தி, இரவை ஒரு சடங்காக மாற்றியிருக்கிறது;
இல்லையென்றால், நாம் இரவிலும் அல்லவா வாழ்ந்துகொண்டிருப்போம்?
ஆனால், இன்றைய நாள் வரை வௌவால், ஆந்தை,
சூரியகாந்தி இவற்றுக்கு நாசூக்கென்பது என்னவெனத் தெரியாது
என்பது நாம் வெளிப்படையாக வருந்தக்கூடிய அளவிலே இருக்கிறது,

இங்கே நிலவைப் பற்றி சொல்லியாக வேண்டும் -
அது சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி
(அப்படி வாங்குவதாலும் நமக்கு அருகாமையில் வசிப்பதாலும்,
நிலவைச் சூரியனின் நிழல் எனச் சொல்பவர் உண்டு),
சடங்குகளைச் சரிபார்க்கும் பணியை இரவெல்லாம் திறம்படச் செய்கிறது;
ஆதலால், நாம் நினைத்ததுபோல நிலா, சூரியனுக்குப் போட்டி அல்ல,

சரியாகச் சொல்லவேண்டுமானால்,
சூரியனுக்கு எதிரியாய் இருப்பவை, தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களே!
நட்சத்திரங்கள், சூரியனைப் போல சுடுபவை என்றாலும்,
கண்ணுக்குப் புலப்பட்டும், புலப்படாமலும் இருக்கும்
தூரத்தினாலேயே, கனவில் நன்றாகக் காட்சி தருகின்றன;
இப்படித்தான் அவை நட்சத்திர மதிப்பைப் பெறுகின்றன

July 12, 2008


கடலிலிருந்து நிலத்திற்கு வீசும் காற்று

கடலுக்கும் நமக்கும் நடுவில்
கட்டிடங்கள் இருக்கின்றன, சமைக்கப்பட்ட மீனைத்
தழுவி வந்த காற்று, குறுகலான தெருவில்
நடந்துகொண்டிருக்கும் நம்மையும் தழுவிச் செல்கிறது,

வீட்டுக்குள் மறுஉரு பெற்று
சன்னல்வழி வெளிவரும் மின்னணுக்குரல்கள்
உயரம் குறைந்த அலைகளின் ஓசையில் கலந்து
நம் மௌனத்தின் பின்னணி மட்டும் மாறுகிறது,

நாம் மௌனத்தைத் தொடர்கிறோம்,
உன் பாதங்கள், நான் அவற்றைப் பார்ப்பதற்குச்
சற்றுமுன்னர்தான் பறிக்கப்பட்ட மல்லித்தழையின்
வேர்க்கிளைத்தலைப் போலிருக்கின்றன,

கால்கள் தரும் சுதந்திரத்தின்
சாத்தியங்கள், ஒவ்வொரு முறையும் நம்மை
நெடுந்தொலைவுக்கு அழைத்துச் செல்கின்றன,
நாம் அதே கால்களுடன் வீட்டினுள் நுழைகிறோம்

July 2, 2008


'இரவைக் கைப்பற்றி'

'எதையும் எவ்வித பிரமிப்பும் இன்றி காணும்'
P.ன் ஓவியங்களில், பலவேறு வடிவங்களில்
நிலவு சிந்துவது ஒளியா, ஒளியென்னும் மாயமா
என்பது விசாரணைக்குள்ளாகியிருக்கிறது

பூமியின் குறுக்காக ஓடுகிற ஓர் ஆற்றுவரி
மீது பறக்கும் நாரை, நீரில் மிதக்கும் நிலவு,
இரண்டும் முறையே மீனாலும் நாரையாலும்
இழுத்துச் செல்லப்படுகின்றன கடல் வரையிலும்

நட்சத்திரக்கொத்துகள் வரை பரவிய ஆழமான இரவு
பகலைவிடப் பெரிதானது, பாதையில் படர்ந்து,
கூரையின் மேலும் கீழும் படர்ந்து, அனைத்தையும்
அது நனைக்கிறது, அல்லது அணைக்கிறது