March 27, 2010


புறநகர் கட்டிடங்கள் மீது வெயில் ஓய்ந்தது

புகையும் காய்ச்சலோடு படுக்கையில் கையூன்றி அமர்ந்தவனின்
உலர்ந்த மூச்சில் அவ்வப்போது எழும் உயிர்குறைந்த ஓசைகளில்
கலந்து வளைய வரும் உணவுப்பையின் புளித்த வாசனையூடே

பூரண அம்மணமாய் ஒற்றைக்கண் போல் விழித்து மறையும்
தொலைதூரத்துச் சொற்களும் அதிஆழம் தொட்ட சொற்களும்
நெஞ்சத்தக உணர்வுகளைக் கண்டும் செய்யவில்லை ஒன்றும்

பன்னிரு இரவுகளாய் நிழற்பாசியாய் படர்ந்திருந்தது உண்மையே
ரோஜாவண்ண மொழியின் நாவில் நோயின் நச்சு வெண்மை!
உண்மையே அனிச்சையாய் நிகழும் அத்தனை அசைவுகளும்!

பழைய புறநகர் கட்டிடங்களின் மீதிருந்த வெயில் ஓய்ந்தபோது
அணிந்த கசங்கிய சட்டையின் ஜேப்பியில் துழாவும் கையுணரும்
சலவையினால் காகிதப்பொருக்குகளான மருந்துச்சீட்டு போல

பதியனிட்ட சொற்களை தெருவிளக்கொளியில் மறந்துவிட்டு
நாசியில் நறுமணம் கமழும் கணம் நிகழக் காத்திருக்கிறோம்
இடிபாடுகளுக்கிடையில் நின்று சுற்றும் நோக்கும் பூனையாய்

3 comments:

நந்தாகுமாரன் said...

எனக்கு பிடித்த கவிஞர்களுள் நீங்களும் ஒருவர் ... அசத்துகிறீர்கள் ... தொடருங்கள்

இரா. சுந்தரேஸ்வரன் said...

நந்தா... உனது தொடர்ந்த வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

anujanya said...

வாவ், ரொம்ப நல்லா இருக்கு.