December 27, 2009


காட்டுக்குள்ளிருந்து வெளிவரும் முகம்

நேயா சொல்கிறாள்: காட்டு உலாவுக்குப் போகும்போது புத்தகத்தை எடுத்துக்கொண்டு வராதேடா என்று சொன்னேன், ரசி கேட்கவேயில்லை, நாங்கள் பாதையேயில்லாத காட்டுக்குள்ளே நெடுநேரம் நடந்து, சோர்ந்து, நீரெல்லாம் தீர்ந்தே போனது, புத்தகத்தின் கனத்தைத் தாளமுடியாமல் அவன் எங்களிடம் கேட்டான், நாம் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஆளுக்குக் கொஞ்ச தூரம் புத்தகத்தைச் சுமந்து வருவோமா என்று கெஞ்சிக் கேட்டான், நாங்கள் எல்லோரும் மாட்டோம் என்று சொல்லிவிட்டோம், அப்புறம் நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் - காட்டுக்குள்ளே அந்த இடத்தில் வேர் முண்டுகள் வெளியே தெரிந்த மரம் ஒன்று இருந்தது - புத்தகத்தை அந்த மரத்தடியில் வைத்துவிட்டு திரும்பியே பார்க்காமல் வந்துவிட்டான், புத்தகத்தின் பக்கங்களை காற்று புரட்ட புரட்ட, மரம் வாசித்து, மரத்துக்கு வருகிற பறவைகளுக்கெல்லாம் சொல்லும், பறவைகள் சும்மாயிருக்குமா? எச்சமிடும்போதெல்லாம் எச்சமிடும் இடமெல்லாம் அதைச் சொல்லாதா என்ன? திரும்பத் திரும்பச் சொல்லும்தானே? காடு முழுவதும் அப்புத்தகத்தைப் படித்த பிறகு அந்தக்காடு என்னவாகும்? என்று நான் கேட்டேன், ரசி பாவம், பயந்தே போய்விட்டான், பயந்துகொண்டேதான் வீட்டுக்கு வந்தான்.

December 12, 2009


வண்டி செல்லும் வழியில்தானே நெல்மணிகள் சிந்தும்?

வைத்த முதல் அடியில் வலப்புறம்
நகரும் அடுத்த அடியில் இடப்புறம்
தலையாட்டும் இருபுறம் வாலாட்டும்
ஈயோட்டும்
அடிக்கடி தன் முதுகைப் பாராட்டும்
மாட்டின் குதத்தில் பட்டும் படாமல் காலாட்டும்
ஒரு வட்டம்
ஒரு வழியுள்ள மட்டும் உருளட்டும்
ஊருக்கும் நீரிருக்கும் வேருக்கும்