June 20, 2009


P.ன் வாத்துகள்

P. சொன்னான்: என் மனைவியும் என் மகனும் மதிய வெய்யிலில் நடப்பதை வரைந்து கொண்டிருந்தேன், மதியத்தின் அனல்காற்று அவளுடைய உடையில் அலைகளை உண்டாக்கிச் சென்றது, மனைவியின் முகத்திலோ மகனின் முகத்திலோ எந்தவித அவசரமும் தெரியவில்லை, வெய்யில் தரும் கருப்பு நிழல்களை அவர்களின் முகத்தில் காணோம், அவர்கள் பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தார்கள், அப்போது காற்றின் ஓசை எனக்குக் கேட்டுவிட்டது, மிக மெல்லியதாக இருந்தாலும் அந்த ஓசை ஓவியத்தில் புகுந்துவிட்டது, என்னைச் சுற்றியிருந்த ஓசைகளின்மீது வெய்யில் பட்டு வேறுவிதமாய் கேட்டது, ஓசைகளுக்கிடையே வெய்யில் நிரம்பி ஓசையின்மையின் வண்ணமாகியது, ஓவியத்தில் வண்ணங்களைக் கொட்டிவிட்டு, அதன்மீது இரு வாத்துகள் ’க்வாக் க்வாக்’ சொல்லி நடப்பதை வரைந்தேன்.

June 1, 2009


நீ பாடத் தொடங்கு

காத்திருத்தலை அறியாத இதயம் வேகமாகத் துடிக்கிறது,
எழுதப்படுவதற்கு முன்பிருக்கும் கவிதை போல
நீ உள்ளே வீற்றிருக்கிறாய்

எத்தனைப் பெரிதான குரல் கொண்டு உன்னை அழைப்பது?
வாசல் தட்டப்படுவதை தடையெனக் கொள்ளாமல்
நீ பாடத் தொடங்கு