March 30, 2009


வானவில்லுக்கு ஒத்திகை இல்லை

சீருடையை மறுத்த உருவங்கள்
சித்திரங்களாவது எப்படி? கடலிடம் நிறமிழந்த
வெண்மணல், கடலின் அருகிலே கிடக்கிறது

நடுக்கடல் இரவில் கப்பலை மோதும்
சிற்றலைச் சத்தம், கப்பலைச் சேரும்
செய்தியை நனைத்துக் கப்பலை நிரப்பும்

ஆழ உறங்குபவரைப் பாடு,
அருகில் விழித்திருப்பவரைப் பாடு,
அம்புகள் இருளில் நுழைந்து இருளாகிப் பாயும்

இருளுக்குள் புகை ஊடுருவும் வரை
புகையைத் தொடர்கிறது நெருப்பின் வெளிச்சம்,
நா மட்டுமே கொண்டது, தீ என்றுமே புதியது

உறக்கத்தினுள் இயக்கம்தானா கனவு?!
ஒருகணம் நிற்கும் கடிகாரம் என்ன கனவு காண்கிறது?
இது எல்லையற்ற நாடு, நீ எங்கு செல்லவேண்டும்?

திண்ணையற்ற ஊரை காகம் கொத்திச் செல்கிறது,
காத்திருக்கும் தூண்டிலில் பசித்த மீன் விழுகிறது,
புழு மண்ணையே தின்கிறது, மண்ணையே கழிகிறது

ஆறு வளைந்து வளைந்து செல்கிறது,
பாதை ஏன் வளைந்து வளைந்து செல்கிறது?
வானம் நீலமாகிக் கடல் நீலமாகிறது

March 20, 2009


மெதுவாக மாறு

மெதுவாக மாறினால்
எளிதாக இருக்கும்
உனக்கும் அனைவருக்கும்

திடீர் மாற்றம்
கலக்கத்தைத் தரும்
உனக்கும் அனைவருக்கும்

மெதுவாக மாறினால்
ஒருவருக்கும் தெரியாது
கலக்கமில்லை உனக்கும்

March 8, 2009


நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வின்மீது பூனை எதிர்த்திசையில் நடக்கிறது

யார் தொடங்குவாரோ தெரியாது -
இவ்வூரில் பூனைகளும் நாய்களும் சண்டையிடும்,
எந்த நாய் தொடங்குமோ தெரியாது -
இவ்வூரில் நாய்கள் தமக்குள்ளே சண்டையிடும்,
பூனைகளில்லாத அவ்வூரில்
நாய்கள் மனிதரிடம் சண்டையிடும்