January 23, 2008


உன்னுடைய வெளிச்சம்

நீ ஆலோசனை பெறும் மனநல மருத்துவரின் அறையில்
பார்த்த நட்சத்திரங்கள், இப்போது வானில் சிதறியிருக்கும்
ஒழுங்கிலேயே இருந்து, உன் நம்பிக்கையை ஒளிரச் செய்கின்றன

இரவுணவை அளவுக்கதிகமாக,
பேரதிகமாக, சுயநினைவிலிருக்கும்போதே உண்ணுவதை,
அடுத்த சந்திப்பில் அவரிடம் நீ சொல்லிவிடவேண்டும்

அடுத்த சூரியோதயத்தை முன்னோக்கும் உன் ஆர்வம்,
அதன் நேரத்தைத் துல்லியமாகச் சொல்லி, மகிழ்ந்து,
விடைபெறுவதை உன் வழக்காக்கி இருக்கிறது

என்னதான் முழுதாகத் திறந்திருந்தாலும்,
கதவு மூடியிருப்பதாக உனக்குத் தோன்றுகிறது,
சூரியன் வீட்டிற்குள் வராத பொழுதுக‌ளில்

முற்காலத்தில் நீ எழுதிய 'முழுநாள் சூரியனை'
எனத் தொடங்கும் கவிதையில், அச்சூரியனிடம் நெருஞ்சிப்பூ கொண்ட
பொருத்தமற்ற கோபம் எனக்கு இன்னும் மறக்கவில்லை

January 18, 2008


எல்லைகள்

தானும் கடலும் வேறுவேறு என்று புலம்பித்திரிந்த மீனை
கடலைத் தன் தாயெனச் சொன்னவன் அள்ளிப் போக
கரை மீதேறிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கடல்.

January 10, 2008


கதையின்பம்

நானோ நீயோ எளிதாக மறுத்துவிடக்கூடிய
சம்பவங்களைக் கொண்டிருந்தாலும், என் கதையைத்தான்
நீ எழுதியிருக்கிறாய் என்பது தடயங்களில் தெரிகிறது:

வெயிலுடன் அவன் பேசிக் கொண்டிருக்க, அவன் நிழலிருந்த சிறு பூ
காற்றில் ஆடி, அவனறியாமல் எட்டி எட்டி சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்க,
அவனது வயிற்றில் பசி மெதுவாக எழ...

சங்கேத மொழியில் செல்லப் பெயராய் தொனிக்கும்
ஒரு நபருக்குச் சமர்ப்பித்திருக்கிறாய், உன் புத்தகத்தை;
அது ஒரு பிராணியாய் இருக்கலாம் என்பது என் ஊகம்

'என் ஊனம் ஒரு வியாதி போல குணமாகி விடும்'
என்று நம்பிக்கையான ஒரு கதைமாந்தர் சொல்வது போல்
ஏதாவது ஓர் அத்தியாயத்தினை நீ முடித்திருக்கலாம்

ஆனால், பூவின் ஓரிதழ் மட்டும் வாடியிருக்க,
அவ்விதழை உயிரூட்ட அதன்மீது ஒரு துளி ரத்தம் சிந்தியது போல்
மேலட்டை அமைக்கப்பட்டிருப்பது ஏன்?