கடல் ஏரிக்கென்று இருக்கும் எதிர்பாராத ஆழம், பயம்
துடைத்த நீர்ச்செவ்வகத்தில் கருப்புவரி மீன் நீந்துகிறது
தொட இயலாமல், பொழுதாக, நா உமிழ்நீர் சொரியும்
தெருநாயின் பகலை சுவீகரித்துக் கொள்வது சரியாகும்
புலனைத்தாண்டி எரிகிற நேரம் விரயத்தீ, ஏலவிடுதியில்
மிதமாக ஒலிக்கிறது ’இருந்துமில்லாத நடைபாதைச்சொற்கள்’
மல்லாந்த உணவுமேசையும் அதன் உடைந்த கால்களும், அடுத்து
ஒருத்தியின் முலாம் உரிந்த ஆடையலமாரிக்கதவுக்குமிழ்
கல்லும் மண்ணும் இருளும் கலந்து பிசைந்த மாநிலம்.
பிறவாத வானவில்லை அழித்துக் கலைந்த கருந்திரள்
இரவில் காற்றோடு கூடி கவிந்த மழைக்கூத்தைப் பார்
நெளிந்து நிலத்துளையேறி வரும் மண்புழுக்களைப் பார்
புள்ளியில் துவங்கிய சாலையில் ஐந்துமுனை நட்சத்திரம்
குறி, தலைநகரம். நம்முடைய ஒப்புதலாய் வேடந்தாங்கல்
கிளைகளில் வேறு விடுதலையறியாமல் தூரப்பறவைகள்
இடும் ஆயிரம் முட்டைகளில் விரிசலென மின்னலின் நீளம்
October 30, 2011
ஆளுயரம்
Subscribe to:
Posts (Atom)