June 23, 2011


நல்ல கனவுதான்

இராத்திரி நல்ல கனவுதான்
கனவில்தான் தொலைந்தது
கனவிலேயே கிடைத்துவிட்டது

June 4, 2011


நூல்நுனி

அணைந்துவிடாமல் எரிகிற தீ... சிங்காரிப்பவளின் சீப்பிலிருந்து உருவி எடுத்து மேசைக்கண்ணாடியினடியில் சேகரிக்கும் கேசத்திரளாக காற்றில் அடர்கிறது தீயின் எச்சம், நாள்தோறும், புதுஅடுக்காக இரவுகளில் சாலையில் வேய்ந்து படிகிறது, இராட்சத சிலந்தியின் வலைப்பின்னலான மாநகரச்சாலைகளின் இடைவெளிகளில் இருப்பிடம் கட்டி வசித்துவருகிறார்கள் மனிதர்கள், முதல் சிட்டுக்குருவி சன்ஷேட் மீது வந்து குதிக்கிறது, கூவுகிறது, கூடச்சேர்ந்து குதிக்கவும் கூவவும் வாவாவென்கிறது, இரவெல்லாம் அடைத்திருக்கும் ஜன்னலின் இடுக்குவழி பார்க்கத் துடித்து முதிரத்துவங்குகிறது அதிகாலையொளி, பத்துக்கு-பதினொன்று படுக்கையறையில் விழித்திருக்கும் முதியவர் எழுந்து புறப்படுகிறார், சிலநாட்களிலே பரிச்சயமாகிவிட்டது காவல்காரனின் கவலை தோயாத எண்ணெய் வழியும் முகம், முதியவரின் வெளிர்ரோஸ் அரைக்கைச் சட்டையில் காலர் பொத்தானும் கடைசிப் பொத்தானும் தளர்ந்து நூல்பிரிந்து தொங்க, இரும்பு க்ரில் கேட்டை அவரே திறக்கிறார், கல்லெறிபட்ட நாயின் ’பளிச்’ ஓலம் போன்ற கேட்டின் நாராச சத்தம், அதனைப் பொருட்படுத்தாமல் கொண்டியிட்டு மூடி, பின்புறத்தசை கரைந்து தேய்ந்திருக்கும் இடுப்பை முன்னகர்த்திச் செல்கிறார், வெல்கம் நியூஸ் ஸ்டாண்ட் அருகில் சென்றதும் ’இன்றைக்கு வேண்டாமே’ என்று பால்பாக்கெட் வாங்காமல் கடந்துபோகிறார், தொலைவிலிருந்து இன்னும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறான் காவல்காரன், யாரோ பார்க்கிறாற்போலிருக்கும் உணர்வெல்லாம் எப்போதோ மழுங்கிவிட்டது, அவர் ஸ்ரீ சத்யா ஹார்டுவேர்ஸ் வரை ஒரு நடை போய் திரும்பி வருகிறார்