February 16, 2011


பழமுதிர்ச்சோலையைக் கடத்தல்

வடக்கிலும் தெற்கிலும் கடந்துசெல்லும்
பழகிப்போன பொதுப்பார்வையில்
இனிமேலும்
அடுக்கிவைத்திருக்கமுடியாத மாம்பழங்கள்
கைகளில் உருட்டிப்பார்க்கப்பட்டு
ஒவ்வொன்றாய் களையப்படுகின்றன,
போர்மூளும் அபாயத்தில்
உள்ளே அருவருப்பு கலந்த துக்கம்
பழமுதிர்ச்சோலையை நீங்கள் கடந்துசெல்லும்போது

போதிய முதிய வீரர்களில்லாத படைத்தளபதிக்கு
நான்கு தலை
வியூகம் அமைக்கமுடியாமல்
குன்றின் மீதேறி
நின்றுகொண்டிருக்கிறானோ அரூபமாய் வெகுநேரமாய்?
தன்போக்கில்
அம்மிக்கற்களை இம்மியும் நகர்த்தாமல்
புழு, பூச்சிகள் வசிக்கும்
எத்தனையோ பாழுங்கோட்டைகள்!
படைத்தளபதியின்றி
எந்தக் கோட்டையைப் பிடிப்பார்கள்
திங்கள்சந்தையை மகிழ்ச்சியாய் சுற்றும் வீரர்கள்?
மாநிலத்தில் அத்தகைய போர்
உங்களுக்குக் காணச் சகியாது!

அவன் தோள்களைக் குறுக்கி
முதுகைக் கூனாக்கியிருக்கிறான்,
நெஞ்சின் குறுக்கே மடித்த கைகளில்
சாற்றுக்கூழ் வழிய
அழுகியபழங்களை அள்ளிக்கொண்டு
பதில் புன்னகை தராமல்
இலாவகமாய் அதிராமல் நடந்துபோகிறான்,
ஈரமும் வெம்மையுமேறிய
(ஈரம் என்றால் உங்களுக்கு கடல் தானே?!
சூடு என்றால் சூரியன் தானே?!)
காற்றுவெளியில்
சற்றையபொழுது
கர்ப்பமாய் நிற்கிறது பழவாசனை