November 28, 2010


”தெருப்புழுதியாய் மேலெழுந்ததே பின்மாலைப்பொழுது”

         மனம் ஒப்பாமலே அடிக்கொருதரம் ஒட்டிவைத்துப்பார்த்து
கட்டைவிரலின் பரிமாணத்தை ஒப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்,
         வெட்டப்படாமலே தப்பித்து வளர்ந்த ஆள்காட்டிவிரலின்
நகத்தின் கீழ், தொட்டுப்பார்த்த இடத்திலிருந்தெல்லாம் சேர்ந்த அழுக்கை
         கொண்டாடிக்கொண்டிருந்தார்களே அன்றொரு நாள்!
ஊருக்குள்ளே கலைந்துகொண்டிருந்த மாலைப்பொழுதில்
         தெருப்புழுதியிலே வெள்ளிப்பாதரசத்தைக் கொட்டியது போல்
நிலையில்லாமல் அவர்கள் அலைந்து கொண்டிருந்தார்களே,
         எக்கரங்களிலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்?
முரண்டு திமிராமல் தொலைந்து போனார்களோ? எங்கிருந்தோ வந்த
         இனம்புரியாத குருவிகளைத் துரத்திப் போனார்களோ?

         மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவிலே தடுமாறி நிற்காமல்
கோடைமழைச்சாரலில் உருண்டோடும் சிறிய பிளம் பழங்களாய்
         சிறுமூக்கில் வியர்வை பூத்திருந்ததே அன்றொரு நாள்!
வேறொரு நாள் மழைப்புழுக்கத்தில் விடிந்தபோது சில மணித்துளிகள்
         நகராமலே நின்றுவிட்டன, பால்மாடுகளைப் போல்,
கருவேலங்காட்டின் நடுவிலே துவங்கிய கனவினால் முகம் வீங்கி
         முதன்முறையாக பேனாவில் ஏதோ எழுதிய ஞாபகத்தில்
சீருடையணிந்து சீக்கிரமே வீட்டுவாசலில் நின்றிருந்தார்களே,
         எப்பொழுதிலே தொலைந்து போனார்களோ,
எவ்வுடையிலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்?
         மரித்துப்போன மண்புழுக்களைத் தாண்டிச் சென்றார்களோ?

         யாருமே சொல்லாமல் தாமாகவே தெரிந்துகொண்டதாக
தாமாகவே திருவிழாவுக்குத் தயாரானதாக அன்றொரு நாள்
         தமக்குப் பிடித்தமான ஆடையிலே காத்திருந்தார்களே!
கை நிறையக் கிடைத்த பழ வடிவ மிட்டாய்கள் தின்று
         நாவுகள் நிறம்மாறியதால் காளித்தாயின் குழந்தைகள் என்று
அவர்கள் சுதந்திரமாய் சுற்றிவந்தார்களே அன்றொரு நாள்!
         தெருப்பள்ளத்தில் கொஞ்சமே தேங்கியிருந்த நீரின் மேலே
தேடிக்கண்டடைந்த பெருங்கல்லைப்போட்டு நீர் தெறிக்க ஓடினார்களே!
         எவ்விடத்திலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்?
அடையாளங்களையும் தொலைத்தார்களோ என் குழந்தைகள்?
         ஓயாத பெருவிழாவில் மனம் தொலைந்து போனார்களோ?

November 18, 2010


இரண்டு வண்ணத்துப்பூச்சிகள்

ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டு
இரண்டு வண்ணத்துப்பூச்சிகள்
பூக்களையே இன்னும் பார்க்கவில்லை