August 7, 2010


களைப்பில்லாத பெரும்பகலில்

ஓடி, பால்யநதிக்கரையில் ஒதுங்கிய பிஞ்சுக்கோழியின் தசையைப்
போன்ற கூழாங்கல்லை வேனல்காற்று வீசும்போது தொட்டுத் தடவும் நீரலை,
அலைநீரே பாசியாகிப் பூசிய பச்சைவலைக்குள் கூழாங்கல்

பட்டுச்சரிகை இறக்கைகளில் பட்டாணிக்கல் தூக்கும் தட்டானும்
குழப்பமாய் பறக்கும் ஈரவெம்மையில் பிறந்து அன்றே இறக்கும் மழையீசலும்
முக்காலமும் ஓடும் மூலமற்ற பால்யநதியோரம் கீழிறங்கும்

ஒவ்வொன்றாய், ஒன்றையொன்று முந்தி, மந்தமான சிரித்தமுகத்துடன்
கவர்மெண்ட் விதைத்த சீமைக்கருவேலங்காட்டுக்குள், ஒற்றையடிப்பாதையில்
தாவித்தாவிச் செல்லும் மீன்தூண்டிலில் வாய்ப்புண்ணான தவளைகள்

நண்பகலில் முக்கியத்தடயமாய் நீர்க்குமிழிகள், உடன் மிதக்கும்
கண்கள் நனைந்து கண்ணிமைக்காமல் நீந்திய குட்டித்தவளைகள்
நினைத்த மாத்திரையில் தன்னுடல் எறிந்து தாவும் பால்யநதியின் நீர் மிதித்து

மூன்று சாலைகள் திசைபிரியும் பழுப்புநிலத்தில், புதுப்பல் பொருத்தி
மின்ரம்பம் அறுக்கும் வேங்கைமரத்தின் வாசனையில் ஓடும் பால்யநதியோரம்
பெருங்கண் தேரைகளின் மூச்சு மட்டும் கூழாங்கல்மீது அசைந்திருக்கும்