January 28, 2010


ஆள்காட்டி விரலால் எளிதாக

ஓவியக்கூடத்தில் அவன் ஒரு மாலையில்
ஓர் ஏணியைச் சாய்த்துவைத்து மேலேறுகிறான்

தூரிகை மீறித் திரண்ட பசும்நெல்லிக்கனி போல
அவன் மிருதுவான உள்ளங்கையில் ஒரு விண்மீன்
சூடேறித் தேன்போல வழியும் நிறக்குழம்பு
அந்திக்காற்றோடு கலந்து கொண்டிருக்கிறது

ஏதோ ஓர் இளம்பிறை இரவில்
இயல்பாக நிகழும் விளையாட்டாக
ஆள்காட்டி விரலால் எளிதாகத்
தோண்டி எடுக்கப்படும் ஆழத்தில் புதையுமென

ஒன்பது மணிக் கரும்பலகையாய் நிற்குமே வானம்-
அதில் ஒட்டி உறைந்து ஒரு முத்தாய்
ஓர் அசாதாரண மணித்துளியில்
ஓரெழுத்தாய் உதிருமென

அல்லது விலகிச் செல்லும்
வேறொரு விண்மீனின் தலையோடு தலை மோதி
ஒளி பொறியாய் பறக்கக் காண
காட்டுமைனாக்களுக்கு வாய்க்குமோ என

விண்ணை நோக்கி அவன்
விண்மீனை பலம்திரட்டி எறிகிறான்