September 7, 2009


பிரபஞ்ச வெடிப்புக்குச் சரிநிகராக

பலூனைப் பற்றி பாடுவதா?
பலூனைப் பற்றி பாடுவதானால்,
பலூனை மட்டும் பாடுவதா?
ஊதிய பலூனின் வாயைக் கட்டும்முன்
தப்பிப்பறக்க
பலூனுக்கு உள்ள வாய்ப்பைப்
பாடவேண்டும்,
வெடிக்கும்படி பலூன் ஊதப்படுவதைப்
பாடவேண்டும்,
அது வெடிக்கும் கணத்தைப்
பிரபஞ்ச வெடிப்புக்குச் சரிநிகராகப்
பாடவேண்டும்,

பலூன் விற்பவன் விடும் கொட்டாவிகளைப்
பாடவேண்டும்,
பலூன் விற்பவன் வைத்திருக்கும்
கைப்பம்ப்பைப்
பாடவேண்டும்,
நீண்ட பலூனில் அவன் செய்யும்
போதாமையின் வடிவங்களைப்
பாடவேண்டும்,
அவனுள் நுழைந்து
அவனுடைய நுரையீரலைப் பற்றி
பாடவேண்டும்,
பலூனை உரசி உரசி அவன் செய்யும்
‘த்த்ட்த்ரீட்த்ச்த்’ச் சத்தத்தை
வாயால் உச்சரிக்க முடியாமையைப்
பாடவேண்டும்,

பலூன் விற்பவனைச் சுற்றி
எத்தனை வண்ணங்களில் பலூன்கள் என்று,
பலூன் விற்பவனைச் சுற்றி வந்து
அவற்றில்
எந்த பலூன் ரொம்பப் பெரியது என்று,
அவற்றில்
எத்தனை சிவப்பு பலூன்கள் என்று,
அவற்றில்
இந்த பலூனைத்தான் வாங்குவேன் என்று
மனதிலே எழுதிக்கொண்டு
வாங்காமல் நகருபவன்
வீட்டுக்குச் செல்லும் வழியை
விவரித்துப்
பாடவேண்டும்,
பலூன் வாங்கியவன் பலூனை
விரல்களால் உரசும் சத்தம்
வேடிக்கை பார்ப்பவனுக்கு
உகந்ததாயில்லை என்பதைப்
பாடவேண்டும்,
அச்சத்தத்தில்,
பலூன் உடைந்துவிடும் அச்சத்தில்,
பலம் குறைந்திருப்பதைப்
பாடவேண்டும்,

காற்றும் விரல்களுமே
பலூனுக்கு நட்பும் துரோகமுமாய்
வாய்த்திருக்கின்றன என்று
பாடவேண்டும்,
மேலே மேலே மேலே
பறக்கும் பலூனில்
லேசான காற்று இருக்கிறது,
ஆமாம், காற்றில் லேசான காற்று
ஒன்று இருக்கிறது என்று
பாடவேண்டும்,
வாயில் வைத்து ஊதி ஊதி,
பெரிதாக ஊதி,
பெரிதான பலூனில்
கனமான கரியமிலவாயு நிறைந்திருப்பதைப்
பாடவேண்டும்,
காற்று நிரம்புவதால் பலூனுக்கு
வடிவம் கிடைக்கிறது என்று
பாடவேண்டும்,
பலூனில் நிரம்பிய காற்று
பலூனின் வடிவம் பெறுகிறது என்று
பாடவேண்டும்