வெளிச்சத்தையும் எடையையும் வெளியில் எறிந்த பிறகு
வேகம் மட்டுமே ஒளியாகிறது, வண்ணம் என்பதே
வடிவமாக இருக்க இயலும் என்பதன் ஆதாரங்களை
வானில் காண்கிறான்
பிம்பங்கள் தந்து சுமை கூட்டும் காகிதமும் பேனாவும்
கண்ணாடியும் விடுத்து பயணிப்பவனுக்கு
காகிதங்களின், கண்ணாடியின் எல்லைகளுக்குள்
பயணமென்று ஒன்று உண்டா?
குறுக்கிடும் ஆற்றின் கரையோரமாய் நடந்து
படகை அல்லது பாலத்தைச் சந்திக்கும் வரை
அவன் ஆற்றின் பயணத்தை ஆடையாக அணிந்துகொள்கிறான்
வயலில் பெய்யும் மழையில் மென்நினைவுகளோ
சுயமௌனமோ மேலெழும் முன்னமே
மழையின் சத்தம், அவனைக் கரைத்துக்கொள்கிறது
June 23, 2008
பயணியைத் தொலைத்த பயணம்
June 11, 2008
மரத்தின் பாகங்கள்
இளங்காலையில், மதிய உச்சியில்,
இன்னபொழுது எனச் சொல்லமுடியாமல்
மாறிக்கொண்டிருந்த பொழுதுகளில்,
பொழுதுகளை அறியாமல்,
அறிய விரும்பாமல் கழித்த காலங்களில்
இம்மரத்தினடியில்தான் நாமிருந்தோம்
சொரசொரப்பான அடிமரத்துப்
பட்டைகளின் மீது விளைந்த
கிளர்ச்சியில் கண்மூடிக் கிடந்தோம்,
இன்று கிளைகளுக்கிடையே காணும்
சிறுசிறு வான்துண்டுகளை,
எப்பொழுதிலும் நாம் கண்டதில்லை
தயங்கித் தயங்கி அருகே வந்து
சென்ற பருவத்து வித்துக்களையோ
எறும்புகளையோ கொத்திய பறவையையும்
முன்பு மரத்திலிருந்து
கேட்ட ஒலிக்குறிப்புகளையும்
நாம் பொருத்திப் பார்த்ததில்லை
விரும்பிய தூறலையும்
எதிர்கொள்ள இயலாத சுழல்காற்றையும்
நம்மோடு அனுபவித்த இம்மரம்
இவ்வாண்டில்
பூக்கும் பருவத்தை எட்டும்முன்
நாம் பிரிந்துவிட்டோம்
நம்மைப் பார்த்துக் கொண்டே,
நம் பேச்சுக்களையும்
நம் மௌனங்களையும் கேட்டுக் கொண்டே,
மரம் ஓரங்குலமாவது வளர்ந்திருக்கும்,
நம் அருகாமை
அதற்கு உரமாகச் சேர்ந்திருக்கும்
சாய்வாக விழுந்த வெயிலின் மீது
மழை விழுந்ததில் வானவில் தோன்றும்
வாய்ப்புள்ள திசையை
கால்களுக்கு நினைவிருக்கிறது,
மழையீரத்தில் மரம் சிந்திய பூக்களின் மேல்
மரம் மேலும் ஈரத்தைச் சொட்டுகிறது
June 5, 2008
சொல்லாலானவன் அந்தியிடம் சொன்னது
குளிர்ந்த காற்றில் சாம்பலாய் மிதக்கும்
அதிகாலை வெளிச்சத்தில், எனது முதலெழுத்தைத் தேடி,
என் ஞாபகத்தைப் பலப்படுத்திக் கொள்கிறேன்
பூக்களுக்காக, சிறுமி குடம் குடமாய் நீரூற்றுவதும்,
நிலவொளியின்போது எழுத்துகள் மரமேற, பழங்கள் தரைவிழுவதும்,
தொடர்ந்து எழுத்துகள் விழுவதும், அருகில் நிகழ்வது போல் கேட்கிறது
விடைபெறுதல்கள் நேர்கிற அறைகள், என் வழக்கமான
கற்பனைகளை நிரப்புகின்றன; நடமாட்டத்தையும் பெயர்களையும்
இழந்துவிட்ட இந்தத் தெருக்களைக் கடப்பதென்பது முடியாமல் போகிறது
எனது புத்தகங்களுக்குள்ளே கண்டுபிடிக்கப்படாமல் மறைந்திருக்கிற
மவுனங்களைப் பற்றி ஏதாவது சொல்லிட வேண்டுமென்றால்
அவை சிறிய கீற்றுகளே என்று சொல்வேன்