August 28, 2011


முடிவில்லாமல் அழகென்று பேச

தின்று பருக்காத குழந்தை
சும்மாயிருந்தும்
முனைவரை ஏன்
கூட்டிப்போகணும் சோப்புக்கிண்ணம் வாங்க?
ஆணித்தரமாய் அல்ல
உடைந்த வெண்பூசணிப்பாளம் போல, அப்படியே நின்றும்
அழுதும் பார்த்தும் சந்தேகத்தோடு கண்துடைத்து
எது அழகென்று பேச
கோணிச்சுளிக்காமல் முதலில்
திரும்பிய அம்முகம்—மைசூர் சந்தன சோப்பு இதோ!
பத்துமணிநேர வீட்டுக்குள்
எட்டிப்பார்க்கும் தலையாக
குட்டி ஆமை சிரித்தவாயாக அமர்ந்திருந்தது—பாதிக்கும்
கீழே
      நீருள்ள வாளியில்
                        நீர்ச்சொட்டு
      அலைகளாய்
அதே சிரிப்பு
எங்கோ செய்த அச்சில்
உள்வாங்கிக் குழிந்த ஆமை முதுகில் நம் ஓருலகை
மணக்க வைக்கும் சோப்பு, சுத்தமாய் ஒரு நாள்
கரைந்ததால்
எல்லோரும் தூங்கியெழுந்ததால்
புதியது

August 17, 2011


ஒரேயொருவனை

பல்வலி
அறிந்த அவனை
சொல்வலி
அறிந்த அவனை
கால்வலி
அறிந்த அவனை

எதிர்பாராத கணத்தில்

தொங்குமீசை
வைத்திருக்கும் அவனை

இன்று, வெள்ளிக்கிழமை?

எல்லாத்திசையிலும் படகுகள்
கொடிகட்டிச் சென்றுகொண்டிருக்கும்
சட்டை அணிந்தவனை

அவனையறியாமல்
கொன்றுவிடவேண்டும்

இன்று

அவன் சென்ற வழியை
வேறு யாரும் அறிந்துவிடாமல்
அழித்துவிடவேண்டும்

August 4, 2011


கதவுக்குறிப்பு

எத்தனையோ
வண்ணக் கதவுகள்!
ஒரு கதவு, முழுவதும்
மூடியிருந்தாலும்
முழுவதும் திறந்திருந்தாலும்
புல்லின் அமைதி தரும் நிறைவு!