June 29, 2010


பேரீச்சம்பழக் கப்பல்

மூட்டை மூட்டையாய் பேரீச்சம்பழங்களைச் சுமந்து
கப்பல் நகர்ந்துகொண்டிருக்கிறது உப்புநீரின் மேல்
நெடுநாட்களாக மிதந்து செல்லும் பேரீச்சைகளின்
இனிப்பு அதிகமாகிறது நாளாக நாளாக

June 4, 2010


இரவும் பகலும் புளிக்கும் திராட்சை

(1)

பொய்த்துப் பொய்த்துப் பின் வேர்களின் நிசப்தம் நனைக்கப் பெய்த மழை
மேம்போக்காய் வெறுப்பு கொண்டு கழுவிய இலகுரக வாகனங்கள் பலவற்றின்
சாவிகள் தொலைந்து போயின இம்மனிதர்களின் அதிகாலைக் கனவுகளில்
சீப்போ பேனாவோ நாலணாவோ போல அல்லவே இச்சாவிகள் தொலைவது

வாரநாள் விடியலில் மும்முரமான இம்மனிதர்களின் வாகனச்சாவித் தேடலில்
ஓரவிழியில் படும் தவணைக்கெடு நெருங்கிய இல்லங்களின் சாவிகளும்
அவற்றின் பிரதிகளும் மின்ரீங்காரமிடும் குளிர்சாதனப்பெட்டியின் சாவி போல
சாவியெனக் கொள்ளமுடியாதவையும் சேர்ந்தே தொலைந்தன இம்முறை

பயந்து தமக்குள் ஒருவனாக ஒளிந்துகொண்டுவிட்ட பூட்டுச்சாவிக்காரனின்
கட்டைவிரல்களைப் பழித்துப் பேசுகின்றனர் இம்மனிதர்கள் முகம் மாற்றி
பிறகு ’அவனும் பாவப்பட்டவன்தானே’ என்கின்றனர் ’நாம்’ பண்பலையில்
அடைக்கும் தாழ் மெழுகாய் உருகி அணுகும் விரலைச் சுட்டுவழியுமோ?

தம் வீட்டை விட்டு வெளிச்செல்லாமல் குணமிழந்தவர்களாய் இம்மனிதர்கள்
நகராமலே சோர்வுற்ற தம்மையே தூற்றிக்கொண்டு மறுத்துத் தலையசைத்து
விதையற்ற திராட்சையாய் புளிக்கும் இரவையும் பகலையும் ஒதுக்கிவைத்து
விளக்கொளியில் சுவர்பார்த்து உண்ணத் துவங்குகின்றனர் வீட்டிலிருப்பவற்றை


(2)

துணிக்கொடியாகிவிட்ட நாற்காலிமீது வீசப்படும் துண்டுகள் துணிமணிகள்
பரிணாமமுறும் வனவிலங்குகளாய் சுவர் படிந்து நிழலாடும் வீட்டுக்குள்
உள்ளாடை மட்டும் அணிந்து கைகள் தொங்க நிற்கின்றனர் இம்மனிதர்கள்
அரை உயிர் பெற்ற துணிப்பொம்மை போல ஆளுக்கொரு ஜன்னலில்

சூறைக்காற்றில் உதிர்ந்து காய்ந்த பூக்களின்கீழே மரவட்டைகள் சுருண்டு தூங்கும்
ஆளில்லாத நந்தவனத்தின் கிணற்றடியில் தொலைந்த சாவிகளை விழுங்கி்யவன்
பெரும்பற்களும் துளையுள்ள தலையும் கொண்ட கனத்த சாவியாகி விழுந்தான்
பூச்சியங்களின் இடமதிப்புகளை எறும்புகள் இழுத்துச்சென்ற இன்னொரு கனவில்


(3)

அள்ள முடிந்தால் கையில் அள்ளி நெஞ்சோடணைத்துக் கொஞ்சத் தோன்றும்
அழகோ அழகு, மனதை மயக்கும் பிரம்மாண்ட மெய்கொண்ட மாயக்குழந்தை
நட்சத்திரங்களையும் நாட்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது தெருவோரம்
நமத்துப்போன தீப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கிவைத்து விளையாடிவிட்டு

இம்மனிதர்கள் தம்வீடுகளில் நுழைந்ததும் வெளியேறும் குருவிகளைப் பார்த்து
பிரிந்து செல்கிறார்கள் சக்கரங்களின் ஓசைகள் தேய்ந்துபோன சாலைகளில்
காட்டுவனப்பை மீட்டுக்கொண்டிருக்கும் மதில் இடிந்த பூங்காக்களை நோக்கி
ஆங்காங்கே நின்று நின்று நகர்ந்து வேட்டை தளர்ந்தவனாய் காற்றை நுகர்ந்து

கடற்கரைச்சாலையில் நடந்துசென்ற சிலர் சாலையோரம் குழுவாய் நின்று
தரைலிருந்து உயர்ந்த சிலைகளின் அருகே தலையும் கையும் காலும் அசைத்து
இப்பூமிப்பந்து பெரிதாகிவிட்டதென வியந்த இன்னொரு காலைப்பொழுதில்
அவ்விடம் உறங்கிய குட்டிநாய் எழுந்து ஓடுகிறது குரலை மேலுயர்த்தாமல்