April 25, 2012


மூவர் படகு

முடிந்துபோய்விடுகிற தொலைவுகளில்
உலகமும் வானமும் எப்படி இருந்தாலும் அங்கே
நிற்கும்போது ஏற்படுகிற மௌனங்களை
அறியாத தண்ணீர்,
ஆழங்குறைந்த இடத்தில்
தெள்ளிய சலனத்திலிருந்த மணல்துகள்கள்
’தலை’ விழுந்து மூடிக்கொண்டிருந்த காசு கண்ணில் பட்டது
அள்ளிப்பருகாத தண்ணீர்,
மெய்யென்ற உணர்வுகள் எழுந்தபிறகு மறந்துபோகாத கனா
குடம், குவளை, பாத்திரக்கலன்களில் பொங்கி
ஊர்த்தெருக்களில் புகுந்த நீராக,
ஊர் எல்லை வரை, செங்கல்சூளைத்திடலிலும் நிறைந்து
சிற்றலைகளோடு புதிய சருகுகள் மிதந்த, குளிர்ந்திருந்த தண்ணீர்,
துள்ளிப்பாய்ந்து படகிலே விழுந்த மீனுக்கு
நாங்கள் இறங்கிச்சென்றபோது இன்னும்
காய்ந்து கூடியிருந்த மினுமினுப்பு, நின்று பார்த்தோம்
தன்னந்தனியாக தூயவானத்தில் கிருஷ்ணப்பருந்து
சரேலென்று இறங்கி வளைந்து பறந்த வேகம்
தடுமாற்றமில்லாத திசைகளில்தான் முழுமை
இருள் கூடிவந்த மாலையில்
எண்ணற்றுப் பறந்த ஈசல்களிடையே
படகிலே ஏறும்முன்பு பேசிய சொற்களின் சாரம்தான்
அடுத்தவரின் கைகளிடத்தில் செய்துகொண்ட அலங்காரம் போல
நாங்கள் பகிர்ந்துகொண்டது